Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 ஏப்ரல் (ஹி.ச.)
மறைந்த தமிழக முதலமைச்சர் எம்ஜிஆரின் உதவியாளராக இருந்தவர் ஜேப்பியார். இவரது பெயரில் பல பொறியியல் கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஜேப்பியார் பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருந்த அவர், கடந்த 2016 ஆம் ஆண்டு மறைந்தார். அவரது மறைவுக்கு பின்னர், ஜேப்பியார் மனைவி ரெமிபாய் பெயரில் சொத்துக்கள் மாற்றப்பட்டன.
இந்நிலையில், தனக்கு சொந்தமான சொத்துகளை தனது பேரன் உள்ளிட்டோர் மோசடி செய்ததாக ஜேப்பியாரின் மனைவி ரெமிபாய் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில், ஜேப்பியார் 2016-ல் மறைந்த பிறகு, நான் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தேன். எனது கணவர் பெயரில் தொடங்கப்பட்ட ஜேப்பியார் சிமெண்ட் நிறுவனம் எனது பெயரில் உள்ளது.
வயது மூப்பு காரணமாக எனது மகள் வழி பேரன் ஜெயக்குமார் கிறிஸ்துராஜன் அந்த நிறுவனத்தை கவனிக்க நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், சிமெண்ட் நிறுவனத்தின் நிர்வாக உறுப்பினராக இருந்த அவர், போலி ஆவணங்கள் மூலம் எவ்வித பங்குதாரர் ஒப்புதலும் இன்றி தன்னைத் தானே இயக்குநராகவும், பின் மேலாண் இயக்குநராகவும் தன்னிச்சையாக அறிவித்துக் கொண்டார்.
மேலும், எனது கையெழுத்தை போலியாக போட்டு, ஜேப்பியாருக்கு சொந்தமான ரூ.120 கோடி மதிப்பிலான 1,28,000 பங்குகளை தனது பெயருக்கு மாற்றிக் கொண்டு விட்டார். இந்த நிறுவனம் நலிவடைந்ததாக காண்பித்து, தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தை தவறாக வழிநடத்தி நிறுவனத்தை கலைப்பு நடவடிக்கைக்கு உள்ளாக்கினார்.
நிறுவனத்தின் பெயரில் தனியார் வங்கியில் ரூ. 1.5 கோடி வாகனக் கடன் பெற்று, அந்த பணத்தை நிறுவனத்திற்கு பயன்படுத்தாமல் சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தியுள்ளார்.
மேலும், முறையான அனுமதி இன்றி ரூ. 48 லட்சம் ஊதியமாக பெற்றுள்ளார்.
அது மட்டுமின்றி, காலாவதியான சுரங்க உரிமத்தை பயன்படுத்தி, முறையற்ற குவாரி தொழிலில் ஈடுபட்டது, மின்சார வாரிய ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்தது உள்ளிட்ட பல மோசடிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.
இந்த மோசடிகளுக்கு ஜெயக்குமாரின் உறவினர்களான மருத்துவர் சரண்யா உள்ளிட்ட 6 பேர் உடந்தையாக இருந்துள்ளனர்.
மேலும், நிறுவனத்தின் ஆடிட்டர் ஆர். பழனிசாமி என்பவர் இந்த முறைகேடான ஆவணங்களுக்கு துணை நின்றுள்ளார். எனவே, இந்த ரூ.120 கோடி மதிப்பிலான சொத்து மோசடிகள் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் ரெமிபாய் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் பேரில், ஜேப்பியாரின் பேரன் ஜெயக்குமார் கிறிஸ்துராஜ், அவரது மனைவி சரண்யா உள்ளிட்ட 6 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN