இடது ஜனநாயக முன்னணி தேர்தல் அறிக்கை வெளியீடு - நலத் திட்டங்கள், வேலைவாய்ப்பு, வளர்ச்சி மீது கவனம்
கோழிக்கோடு, 02 ஏப்ரல் (ஹி.ச.) கேரள முதலமைச்சரும், தர்மடம் தொகுதியின் சிபிஐ(எம்) வேட்பாளருமான பினராயி விஜயன், மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார். ‘நவ கேரளம்’ (புதிய கேரளம்) உரு
எல்டிஎஃப் தேர்தல் அறிக்கை வெளியீடு - நலத் திட்டங்கள், வேலைவாய்ப்பு, வளர்ச்சி மீது கவனம்


கோழிக்கோடு, 02 ஏப்ரல் (ஹி.ச.)

கேரள முதலமைச்சரும், தர்மடம் தொகுதியின் சிபிஐ(எம்) வேட்பாளருமான பினராயி விஜயன், மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார்.

‘நவ கேரளம்’ (புதிய கேரளம்) உருவாக்கும் பணியை நிறைவு செய்வதே இவ்வறிக்கையின் மையக் குறிக்கோளாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிபிஐ(எம்) தலைமையிலான எல்டிஎஃப் கூட்டணி, நலவாழ்வு ஓய்வூதியத்தை ரூ.2000-இலிருந்து ரூ.3000-ஆக உயர்த்துதல், முழுமையான வறுமை ஒழிப்பு, பெண்களுக்கு 50 சதவீத வேலைவாய்ப்பு உறுதி உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன்,

விவசாயம், தொழில், கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் ஆழமான மாற்றங்களை ஏற்படுத்தி, கேரளத்தை ஒரு வளர்ந்த மாநிலமாக மாற்றுவதே எங்களின் நோக்கம்.

கடந்த பத்து ஆண்டுகள் சமூகத்தின் சுயநம்பிக்கையை மீட்டெடுத்த காலமாக அமைந்தது. அந்த மாற்றத்தை மக்கள் அங்கீகரித்துள்ளனர்.

இத்தேர்தல் அறிக்கை, எல்டிஎஃப் அரசின் சாதனைகளையும் எதிர்காலத் திட்டங்களையும் ஒருங்கிணைக்கும் ஆவணமாகும். இதில் குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்ற அரசு உறுதியாக உள்ளது.

சவால்களையும், மத்திய அரசின் புறக்கணிப்பையும் கடந்து முன்னேறுகிறோம். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் சாதாரண மக்களின் வாழ்க்கைத்தர உயர்வு ஆகியவை எங்களின் முன்னுரிமைகளாகும்.

என்று கூறினார்.

படுக்கையிலேயே இருக்கும் நோயாளிகளுக்கு முழுமையான பராமரிப்பு வழங்கவும், முதியோருக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதிசெய்யவும் மாவட்ட அளவில் பல்வேறு திட்டங்கள் ஒருங்கிணைக்கப்படும் என LDF அறிவித்துள்ளது. அனைத்து ஓய்வூதியங்களும் மாதம் ரூ.3000-ஆக உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை வலுப்படுத்தும் நோக்கில், ‘மிஷன் 100000’ திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு லட்சம் நிறுவனங்கள் ஆண்டுக்கு சராசரியாக ஒரு கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் நிலைக்கு கொண்டு வரப்படும்.

பெண்களின் தொழிலாளர் பங்கேற்பை 50 சதவீதமாக உயர்த்தவும், 20 லட்சம் இல்லத்தரசிகளுக்கு கிராமப்புற பொருளாதார வாய்ப்புகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமப்புற வளர்ச்சி மேலும் ஊக்குவிக்கப்படும்.

கேஎஸ்ஆர்டிசி-யை இலாபகரமான நிறுவனமாக மாற்றுதல், மின்வெட்டில்லா கேரளம் உருவாக்குதல் ஆகியவைவும் முக்கிய வாக்குறுதிகளாக இடம்பெற்றுள்ளன.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தை ரத்து செய்யும் முயற்சிகளை எதிர்க்கும் என்றும், அத்திட்டம் தொடர்ந்து செயல்பட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் LDF உறுதியளித்துள்ளது.

உள்கட்டமைப்பு உள்ளிட்ட பெருந்திட்டங்களுக்கு விரைவான ஒப்புதல் வழங்க, முதலமைச்சர் தலைமையில் ‘விரைவு ஒப்புதல் நடைமுறை’ அமல்படுத்தப்படும். இதற்காக ‘ஒற்றைச் சாளர ஒப்புதல் வாரியச் சட்டத்தில்’ திருத்தம் கொண்டு வரப்படும்.

விழிஞ்சம் துறைமுகத்தை மையமாகக் கொண்டு ‘வெளிப்புறப் பகுதி வழித்தடம்’ அமைக்கப்படுவதுடன், ‘விழிஞ்சம் தொழிற்பேட்டைத் திட்டமும்’ நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட வரம்புகளுக்குள் மலைப்பகுதி, கடற்கரை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிப்போருக்கு நில உரிமைப் பட்டாக்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய தொற்றுநோய்களை முன்கூட்டியே கண்டறிய ‘தொற்றுநோய் முன்னறிவிப்பு அமைப்பு’ உருவாக்கப்படும். நாட்டளவில் ‘தொற்றுநோய் உளவுத்துறை அமைப்பு’ அமைப்பதற்கும் இக்கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM