Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 ஏப்ரல் (ஹி.ச.)
கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், நீலகிரி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் எல். முருகன் போட்டியிட்டார்.
அப்போது, தேனாடு கம்பை கடநாடு கிராமத்தில் அனுமதியின்றி பொதுமக்கள் மத்தியில் கூட்டம் நடத்தியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு உதகமண்டலம் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இதே போல, நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட சத்தியமங்கலத்தில் உள்ள பள்ளியில் விதிகளை மீறி தேர்தல் கலந்தாய்வு கூட்டம் நடத்தியதாகவும், எல். முருகனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, ஈரோடு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
அரசியல் உள்நோக்கம் காரணமாக இந்த இரு வழக்குகளும் தொடரப்பட்டுள்ளதால், அவற்றை ரத்து செய்ய வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது,
குறித்த கால அவகாசத்துக்குள் வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்பதால், இரு வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மீதான இரு தேர்தல் விதிமீறல் வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.
Hindusthan Samachar / ANANDHAN