சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு- தண்டனை விவரம் மீண்டும் ஒத்திவைப்பு
மதுரை, 02 ஏப்ரல் (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ். வணிகர்களான இருவரும் சாத்தான்குளம் பஜார் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2020- ஆம் ஆண்டு ஜூன் 19- ஆம் தேதி
Sathankulam Case


மதுரை, 02 ஏப்ரல் (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ். வணிகர்களான இருவரும் சாத்தான்குளம் பஜார் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2020- ஆம் ஆண்டு ஜூன் 19- ஆம் தேதி கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த காலக்கட்டத்தில், இவர்களின் கடை குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டி திறந்திருந்ததாக கூறப்படுகிறது.

இதனை காரணமாக கூறி, போலீசார் இருவரையும் சாத்தான்குளம் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையின் போது, காவல்துறையினர் அவர்களை கடுமையாகத் தாக்கினர். இதில் தந்தையும், மகனும் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர்.

இதையடுத்து, சாத்தான்குளம் காவல் நிலையத்தின் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேர் மீது 2027 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையையும், இரண்டாம் கட்டமாக கூடுதலாக 400 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையையும் மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், கடந்த மார்ச் 23- ஆம் தேதி நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பு வழங்கினார்.

அதில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்பது உறுதியாகியுள்ளது.

குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் மார்ச் 30-ஆம் தேதி அறிவிக்கப்படும்; குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை வழங்கலாம் என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

மார்ச் 30- ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது, சாத்தான்குளம் வழக்கில் மத்திய, மாநில அரசுகளின் அறிக்கை ஏன் தாக்கல் செய்யப்படவில்லை? சாத்தான்குளம் வழக்கு மிக முக்கிய வழக்கு. எந்த கருத்தாக இருந்தாலும் பதில் மனுவாக தாக்கல் செய்யுங்கள் என்று அறிவுறுத்தி, வழக்கை இன்றைக்கு (ஏப்ரல் 02) ஒத்திவைத்திருந்தார்.

இதையடுத்து, நீதிபதி முத்துக்குமரன் முன்பு இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சாத்தான்குளம் வழக்கில் 9 பேருக்கும் உச்சபட்சத் தண்டனையாக மரணத்தண்டனை வழங்க வேண்டும் என்று சிபிஐ தரப்பு தெரிவித்தது.

மரணத்தண்டனை, இரட்டை ஆயுள் போன்ற அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர்.

இதனை கேட்ட நீதிபதி, குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.

முன்னதாக, தந்தை - மகனை கொடூராக தாக்கியதுடன், அதனை ரசித்த காவலர்களின் செயல் மனிதாபிமானமற்றது என்று சிபிஐ தரப்பு குறிப்பிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN