Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 ஏப்ரல் (ஹி.ச.)
நாம் தமிழர் கட்சியின் ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் இயக்குநர் களஞ்சியம் பேரணியாகச் சென்று இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இயக்குநர் களஞ்சியம், நெல்சன் மாணிக்கம் சாலையில் இருந்து சுடர் விளக்கை கையில் ஏந்தியவாறு தனது ஆதரவாளர்கள் மற்றும் கட்சியினருடன் நுங்கம்பாக்கம் மண்டல அலுவலகத்திற்கு பேரணியாக சென்றார். அங்கு தேர்தல் நடத்தும் அலுவலர் வளர்மதியிடம் அவர் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் களஞ்சியம்,
கடந்த ஆறு மாதங்களாகவே ஆயிரம் விளக்கு தொகுதி மக்களைச் சந்தித்து வருகிறேன். சென்னையில் உள்ள தொகுதிகளில் மிக முக்கியமான தொகுதியாகும்.
உயர்தர மக்கள், நடுத்தர மக்கள், அடித்தட்டு மக்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் வாழ்ந்து வரும் தொகுதி இது. இந்த மக்களுக்கு எந்தவொரு அரசுத் திட்டங்களும் சரியான முறையில் கிடைக்கவில்லை. நான் வாக்குச் சேகரிக்க செல்லும்போது, சீமான் ஆட்சிக்கு வந்தால் மதுவைத் தடை செய்வாரா? என்று தான் பொதுமக்கள் என்னிடம் கேட்கின்றனர். அந்த அளவுக்கு வீட்டிற்கு ஒரு குடி நோயாளி இருக்கிறார்.
நாம் தமிழர் கட்சியின் மீது மக்கள் மிகப்பெரிய நம்பிக்கையை வைத்துள்ளனர். அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளும் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் மாறி மாறி வெற்றி பெற்றுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். எனினும், இங்குள்ள மாநகராட்சிப் பள்ளிகள் சரியான முறையில் பராமரிக்கப்படாமல் இருக்கின்றன. நான் வெற்றி பெற்றால் ஆயிரம் விளக்கு தொகுதியில் கல்வி, சுகாதாரம் போன்ற பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவேன். நிச்சயமாக நாம் தமிழர் கட்சி இந்த தொகுதியில் வெற்றி பெறும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
சுடர் ஏந்தி மனுத்தாக்கல் செய்ய வந்தது ஏன்? என்ற கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் களஞ்சியம், இந்த தொகுதியில் பாரம்பரியமாக இஸ்லாமியர்கள் ஆயிரம் விளக்கை கையில் ஏந்தி வாழ்ந்து வந்ததாக வரலாறு கூறுகிறது. அதை பிரதிபலிக்கவே மனுத்தாக்கலின் போது கையில் சுடர் ஏந்தி வந்தேன்.
திமுக தேர்தல் வாக்குறுதியாக எதை வேண்டுமானாலும் கொடுப்பார்கள். ஆனால் திமுக, அதிமுகவுக்கு மாற்று என்றால் அது நாம் தமிழர் கட்சி மட்டும் தான் என்றார்.
Hindusthan Samachar / ANANDHAN