Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள சூழலில், அரசியல் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தாங்கள் போட்டியிடப்போகும் தொகுதியில் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், திமுக கூட்டணி சார்பில் அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் எழில் கரோலின், இன்று (ஏப்ரல் 2) தனது வேட்புமனுவை தாக்கல் செய்வதற்காக அரக்கோணம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தார்.
அவருடன் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரும், ராணிப்பேட்டை எம்எல்ஏவுமான ஆர். காந்தி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.
அப்போது, காவல் துறை பாதுகாப்பு தடுப்பு மற்றும் தேர்தல் விதிமுறைகளை மீறி அமைச்சரின் கார் கோட்டாட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், விதிமுறைகளை மீறி, தேர்தல் நடத்தும் அலுவலர் ரமேஷ் முன்னிலையில் அமைச்சர் காந்திக்கு தேநீர் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, காலை 11.02 மணியளவில் வேட்பாளர் எழில் கரோலின் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
பின்னர், அவரின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து, அமைச்சர் காந்தியின் காலில் விழுந்து எழில் கரோலின் ஆசீர்வாதம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
மேலும், வேட்புமனு தாக்கலுக்கு பிறகு வெளியே காத்திருந்த தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அரக்கோணம் – காஞ்சிபுரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், அரக்கோணம் அதிமுக வேட்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ரவி கூறுகையில்,
நான் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த போது, என்னை கேட் அருகே நிறுத்திவிட்டு, 4 பேரை மட்டுமே மனுத் தாக்கல் செய்ய உள்ளே அனுமதித்தார்கள். எனது காரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. அப்படி பார்த்தால், அமைச்சர் காரை உள்ளே அனுமதித்தது விதிமீறல். தேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக நடக்கிறார்கள்.
குறிப்பாக, அமைச்சருக்கு அலுவலகத்திற்குள் தேநீர் வழங்கியது அதிகார துஷ்பிரயோகம். இச்சம்பவத்திற்கு காவல்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குற்றஞ்சாட்டினார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பான வீடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும், இது தெளிவான தேர்தல் விதிமீறல் என்றும் தெரிவித்த அவர், மாவட்ட ஆட்சியரிடம் மின்னஞ்சல் மூலம் புகார் அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
Hindusthan Samachar / ANANDHAN