Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 ஏப்ரல் (ஹி.ச.)
சென்னையை அடுத்த தாம்பரம் சானிடோரியம் பகுதியில் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை அமைந்துள்ளது. புதிதாகக் கட்டப்பட்ட இந்த மருத்துவமனை திறக்கப்பட்டு ஓராண்டு ஆன நிலையில் நூற்றுக்கணக்கானோர் உள்நோயாளியாகவும், வெளி நோயாளியாகவும் இங்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த மருத்துவமனையில் அலுவலகப் பயன்பாட்டிற்கென தனியாக ஒரு கட்டடம் உள்ளது. அதில் தலைமை மருத்துவர் உட்பட அலுவலகப் பணியை மேற்கொள்ளும் பணியாளர்கள் தங்களது பணியினை மேற்கொள்கின்றனர்.
இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று காலை பணிக்கு வந்த மருத்துவர்கள் அலுவலகத்தில் உள்ள அறைக்கு சென்ற போது அறையில் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த லேப்டாப்கள் திருடப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து அரசு மருத்துவமனை நிர்வாகம், தாம்பரம் குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்தது.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அதில் அதிகாலை 04.00 மணியளவில் மருத்துவமனை வளாகத்தில் நுழைந்த மர்மநபர்கள் இருவர் முகத்தில் துணியைக் கட்டியவாறு அலுவலகத்தின் கதவைக் கடப்பாரையால் உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த லேப்டாப்களை திருடிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து தாம்பரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.
கண்ணகி நகரில் பதுங்கியிருந்த இருவரையும் தாம்பரம் தனிப்படை காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த ஜேக்கப் (வயது 28), அப்பு (வயது 27) என்பது தெரியவந்தது. ஜேக்கப் மீது செம்மஞ்சேரி, கண்ணகி நகர், துரைப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு, அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட 9 வழக்குகள் இருப்பதும், அப்பு மீது கண்ணகி நகர், செம்மஞ்சேரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் அடிதடி திருட்டு வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பின்னர் கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து ரூபாய் 2.5 லட்சம் மதிப்பிலான ஏழு லேப்டாப்கள் மற்றும் இரு சக்கர வாகனம் ஒன்றையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
அத்துடன், தாம்பரம் நீதிமன்றத்தில் இருவரையும் ஆஜர்படுத்திய காவல் துறையினர், நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN