இன்று வெளியாகிறது காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் - அவசர அவசரமாக ஸ்க்ரீனிங் கமிட்டி கூட்டம்..!
தமிழ்நாடு, 02 ஏப்ரல் (ஹி.ச.) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு கடந்த மார்ச் 4-ம் தேதி அன்று 28 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. சட்டமன்றத் தேர்த
காங்கிரஸ்


தமிழ்நாடு, 02 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு கடந்த மார்ச் 4-ம் தேதி அன்று 28 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடு கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கீடு செய்த ஒரு மாதம் கடந்த பிறகும் இப்போது வரை காங்கிரஸ் அதன் வேட்பாளர்களை தேர்வு செய்யவில்லை.

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை பரிசீலனை செய்யும் காங்கிரஸ் கட்சியின் ஸ்கிரீனிங் கமிட்டி கூட்டம் டெல்லியில் மூன்று முறைக்கு மேல் கூடியும் வேட்பாளர்களை இறுதி செய்வதில் சிக்கல் நீடித்தது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், வேட்பாளர் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக காங்கிரஸ் தலைமையிடம் குற்றம் சாட்டினர்.

இதன் காரணமாக வேட்பாளர்களை இறுதி செய்வதில் சிக்கல் நீடித்த நிலையில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 3 வேட்பாளர்கள் என காங்கிரஸ் கிளீனிங் கமிட்டி மத்திய தேர்தல் குழுவுக்கு பரிந்துரை வழங்கியுள்ளது.

இந்த பரிந்துரை அடிப்படையில் இன்று இரவு 8 மணிக்கு காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் இக்கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 28 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்? என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, தமிழக சட்டப்பேரவை கமிட்டி தலைவர் ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் வேட்பாளர்கள் முடிவு செய்யப்பட்ட பிறகு இன்று இரவே வேட்பாளர் பட்டியல்கள் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கான கடைசி தினம் ஏப்ரல் 6-ம் தேதி எனும் நிலையில், கடைசி நேரத்தில் வேட்பாளர்களை உறுதி செய்ய காங்கிரஸ் தீவிரம் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / GOKILA arumugam