தேர்தல் பயிற்சிக்கு ஆப்சென்ட்..! இறந்துபோன ஆசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்..!
நாகப்பட்டினம், 02 ஏப்ரல் (ஹி.ச.) எதிர்வரும் தமிழ்நாடு சட்டசபை தேர்தவில் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஈடுபடுவோர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி அனைத்து மாவட்டங்களிலும் தொகுதி வாரியாக பயிற்சி வகுப்புகள் நடைபெறுக
தேர்தல் ஆணையம்


நாகப்பட்டினம், 02 ஏப்ரல் (ஹி.ச.)

எதிர்வரும் தமிழ்நாடு சட்டசபை தேர்தவில் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஈடுபடுவோர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி அனைத்து மாவட்டங்களிலும் தொகுதி வாரியாக பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.

அதன்படி கடந்த 28ம் தேதி நாகப்பட்டினம் சட்டசபை தொகுதிக்கு நாகப்பட்டினம் இஜிஎஸ் பொறியில் கல்லூரியிலும், கீழ்வேளூர் சட்டசபை தொகுதிக்கு தேவூரில் உள்ள இன்பென்ட் ஜோசப்மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், வேதாரண்யம் சட்டசபை தொகுதிக்கு வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் நடந்தது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 3 சட்டசபை தொகுதிகளில் 700 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக 3 ஆயிரத்து 360 வாக்குச்சாவடி அலுவலர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்க தேர்தல் ஆணையம் சார்பில் அழைப்பு கடிதம் கொடுக்கப்பட்டது.

இந்த முதல் கட்ட பயிற்சி வகுப்பில் பங்கேற்காத அலுவலர்களுக்கு சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களால் பயிற்சியில் பங்கேற்காமல் இருப்பதற்கு காரணம் என்ன என விளக்கம் அளிக்க வேண்டும் என விளக்க கடிதம் அனுப்பியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த நோட்டீசை பார்த்தவுடன் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது,

கடந்த 30ம் தேதி அறிவியல் தேர்வு நடந்தது. இந்த தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக அறிவியல் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் பள்ளிக்கு சிறப்பு வகுப்பு எடுக்க சென்றதால் தேர்தல் முதல் கட்ட பயிற்சி வகுப்பில் பங்கேற்க முடியவில்லை என தெரிவித்தனர்.

மேலும், ஆசிரியர்களை சிறப்பு வகுப்பு எடுக்க அனுப்பியது சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம், முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் தான் என்று விளக்கம் அளித்த ஆசிரியர்கள், மாணவர்கள் நலனில் அக்கரை கொண்டு சிறப்பு பயிற்சி வகுப்பு எடுக்க சென்ற தங்களால் தேர்தல் ஆணையம் நடத்திய பயிற்சி வகுப்பில் பங்கேற்க முடியவில்லை என்றனர்.

இதளற்கிடையில், கடந்த 25ம் தேதி(25.3.2026) கீழ்வேளூர் தாலுகா மணலூர் ஸ்ரீ கலைமகள் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றிய பட்டதாரி ஆசிரியர் பாலசெல்வன் இறந்து விட்டார்.

இவர் ஏன் தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்கவில்லை என விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது போல் நாகப்பட்டினம் சட்டசபை தொகுதியில் 98 மற்றும் கீழ்வேளூர் சட்டசபை தொகுதியில் 75 பேருக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பிள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam