Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருந்தாலும் வழக்கம் போல ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டும் நடத்தப்பட உள்ளது.
சென்னை பஞ்சாப் அணிகள் மோதும் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது.
இந்த நிலையில் சென்னை திருவல்லிக்கேணி தொகுதி வாக்காளர் பிரபாகரன் என்பவர் தேர்தல் சமயத்தில் சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்த தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை இன்று காலை அவசரமாக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் முன்பு முறையிட்டார்.
ஆனால் இந்த முறையீட்டை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்குக்கு எண் வழங்கப்பட்டு, விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட பின்னரே, அது வழக்கமான நடைமுறையின்படி எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து, சட்டத்தில் எந்தத் தடையும் இல்லாதபோது, போட்டிகளை நடத்துவதை நீதிமன்றம் எப்படித் தடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நீங்கள் போட்டியைப் பார்க்க விரும்பவில்லை என்றால், வீட்டிலேயே இருங்கள், போட்டிகள் நடத்தப்பட்டால் உங்களுக்கு என்ன பிரச்சினை என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
மேலும், இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என்றும் வழக்கு எண்ணிடப்பட்டால் வழக்கமான நடைமுறைப்படி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b