கும்பகோணத்தில் அட்சய திருதியை முன்னிட்டு 12 கருட சேவை – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
கும்பகோணம், 20 ஏப்ரல் (ஹி.ச.) சித்திரை மாத வளர்பிறை 3ஆம் திதியான அட்சய திருதியை முன்னிட்டு, கும்பகோணம் பெரிய கடைவீதியில் புகழ்பெற்ற 12 கருட சேவை இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, பெரிய பந்தல் அமைக்கப்பட்டு, 12 வைணவத் தலங்களைச் சே
கருட


கும்பகோணம், 20 ஏப்ரல் (ஹி.ச.)

சித்திரை மாத வளர்பிறை 3ஆம் திதியான அட்சய திருதியை முன்னிட்டு, கும்பகோணம் பெரிய கடைவீதியில் புகழ்பெற்ற 12 கருட சேவை இன்று சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவை முன்னிட்டு, பெரிய பந்தல் அமைக்கப்பட்டு, 12 வைணவத் தலங்களைச் சேர்ந்த உற்சவர் பெருமாள்கள் தனித்தனி கருட வாகனங்களில் ஒரே இடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

இதில் சாரங்கபாணி சுவாமி, சக்ரபாணி சுவாமி, ஆதிவராக பெருமாள், இராமசுவாமி, ராஜகோபால சுவாமி, லட்சுமி நரசிம்மர் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் உற்சவங்கள் கலந்து கொண்டன.

மேலும், இவர்களுக்கு எதிரே ஆஞ்சநேய சுவாமி தனி பந்தலில் எழுந்தருளி எதிர்சேவை வழங்கினார்.

ஒரே இடத்தில் 12 கருட வாகனங்களில் பெருமாள்கள் சேவை சாதிப்பது இந்த விழாவின் சிறப்பு அம்சமாகும்.

இந்த அபூர்வ நிகழ்வை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டு பக்தி உணர்வுடன் தரிசனம் செய்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை முன்னிட்டு நடைபெறும் இந்த 12 கருட சேவை, கும்பகோணத்தின் முக்கிய ஆன்மீக விழாக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P