Enter your Email Address to subscribe to our newsletters

விஜயவாடா , 20 ஏப்ரல் (ஹி.ச.)
விஜயவாடா பட்டமட்டாவில் உள்ள அன்ன கேன்டீனை ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் பார்வையிட்டு, அங்கு காலை உணவு உண்டார்.
பின்னர் உணவின் தரம் மற்றும் சுத்தம் குறித்து ஆய்வு செய்து திருப்தி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஏழைகள் மரியாதையுடன் வயிறு நிறைய உணவருந்தும் வகையில் அன்ன கேன்டீன்கள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
வெறும் ரூ.5க்கே தரமான உணவு வழங்கப்படுகிறது.
மாநிலம் முழுவதும் தற்போது 269 அன்ன கேன்டீன்கள் செயல்பட்டு வருகின்றன.
சமீபத்தில் மேலும் 62 புதிய கேன்டீன்கள் தொடங்கப்பட்டுள்ளன. இன்னும் 5 கேன்டீன்கள் தொடங்க தயாராக உள்ளன.
இஸ்கான் பவுண்டேஷன் மைய சமையலறை மூலம் சுவையான உணவு வழங்கப்படுகிறது.
வெளியில் உணவருந்த ரூ.100 வரை செலவாகும் நிலையில், ஏழைகள், ஆட்டோ டிரைவர்கள், கூலி தொழிலாளர்கள் ரூ.5க்கே இங்கு உணவருந்துகின்றனர்.
அன்னதானம் மிகவும் புனிதமானது. இந்த பணியில் மக்கள் தன்னார்வமாக பங்கேற்று நன்கொடைகள் வழங்க வேண்டும்.
என் பிறந்தநாளை முன்னிட்டு என் மனைவி புவனேஸ்வரி ரூ.76 லட்சம் நன்கொடை வழங்கி முன்மாதிரியாக உள்ளார்.
முந்தைய அரசு அன்ன கேன்டீன்களை மூடியது ஏழைகளுக்கு பெரிய அநீதி.
“அன்னபூர்ணா” என அழைக்கப்படும் ஆந்திரப் பிரதேசத்தில் ஒருவரும் பசியால் தவிக்கக்கூடாது என்பதே எங்கள் அரசின் நோக்கம்.
கேன்டீன்களில் ஏழைகளின் முகங்களில் காணப்படும் மகிழ்ச்சி எனக்கு மிகுந்த திருப்தி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA