Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 ஏப்ரல் (ஹி ச.)
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன், உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டதால் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு, சென்னை மகளிர் நீதிமன்றம் கடந்த ஆண்டு (2025) ஜூன் 2ஆம் தேதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
தீர்ப்புக்கு பிறகு அவர் புழல் மத்திய சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு நேரத்தில் ஞானசேகரனுக்கு திடீரென வலிப்பு (seizure) ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அங்கு பணியில் இருந்த சிறைக்காவலர்கள் மற்றும் மருத்துவ குழு முதற்கட்ட சிகிச்சை அளித்தனர். ஆனால் நிலைமை சீராகாததால், அவசரமாக இன்று அதிகாலை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவமனையில் அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
தற்போது அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஸ்டான்லி அரசு மருத்துவமனை தரப்பில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, புழல் போலீசார் வழக்கமான விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சிறையில் ஏற்பட்ட சூழ்நிலை, உடல்நிலை பாதிப்பு காரணங்கள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, ஞானசேகரனுக்கு இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் நான்கு முறை வலிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.
தற்போது ஏற்பட்டிருப்பது ஐந்தாவது முறை என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம், சிறைகளில் கைதிகளுக்கான மருத்துவ வசதிகள் மற்றும் தொடர்ந்து கண்காணிப்பு அவசியம் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
தற்போது அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கவனித்து வருவதால், அடுத்தடுத்த நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ