திமுகக்கு விடை கொடுக்க தயாராகிறது ஆவடி  – அண்ணாமலை பிரச்சாரத்தில் கடும் தாக்கு
சென்னை, 20 ஏப்ரல் (ஹி.ச) ஆவடி சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராஜசிம்ம மஹிந்திராவுக்கு ஆதரவாக நடைபெற்ற பெரும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், பாஜக மாநில முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை கலந்து கொண்டு உரை
Anna


சென்னை, 20 ஏப்ரல் (ஹி.ச)

ஆவடி சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராஜசிம்ம மஹிந்திராவுக்கு ஆதரவாக நடைபெற்ற பெரும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், பாஜக மாநில முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.

அப்போது அண்ணாமலை தனது உரையில் திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்தார்.

தீயசக்தி திமுக ஆண்டதும் போதும், மக்கள் மாண்டதும் போதும் என்ற கோபத்தோடு தமிழக மக்கள் இருக்கின்றனர்.

இந்த முறை மாற்றம் வேண்டுமென்ற ஒரே எண்ணத்துடன் மக்கள் தேர்தலை எதிர்கொள்கின்றனர் என்று அவர் கூறினார்.

ஆவடி தொகுதியின் தற்போதைய திமுக சட்டமன்ற உறுப்பினர் நாசர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த அண்ணாமலை,

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆவடி தொகுதி எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை.

பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்க்காமல், சொந்த கட்சிக்காரர்களுடனே மோதலில் ஈடுபட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

பால்வளத்துறை ஊழல் நிறைந்த துறையாக மாறியுள்ளது. தொகுதியில் பல்வேறு பணிகளில் கமிஷன் நடைமுறை நிலவுகிறது என்று குற்றம்சாட்டினார்.

மேலும், ஆவடி மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. பொறியியல் கல்லூரி அமைப்போம், பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வருவோம் என கூறிய வாக்குறுதிகள் அனைத்தும் காகிதத்தில் மட்டுமே உள்ளது. தொகுதி முன்னேற்றத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட சரியாக செய்யப்படவில்லை எனவும் அவர் விமர்சித்தார்.

தொடர்ந்து அவர், சட்டமன்றத்திற்கு சென்று மக்களின் பிரச்சினைகளை பேச வேண்டிய நிலையில், உதயநிதி ஸ்டாலின் அவர்களை புகழ்வதற்காக மட்டுமே சிலர் செயல்பட்டு வருகின்றனர். இது ஜனநாயகத்திற்கு ஏற்ற நிலை அல்ல என்று தெரிவித்தார்.

ஆவடி பகுதி போதைப் பொருள் பரவலின் மையமாக மாறிவிட்டதாகவும் குற்றம்சாட்டிய அவர்,

இதை மாற்ற வேண்டுமெனில் திமுக ஆட்சியை மாற்ற வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியே நல்லாட்சியை வழங்கும்” என்று கூறினார்.

இறுதியாக, ஆவடி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராஜசிம்ம மஹிந்திரா அவர்களை தாமரை சின்னத்தில் வாக்களித்து மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பொதுமக்களிடம் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்தார்.

வரும் 23ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். ஆவடி தொகுதி மாற்றத்தை காணும் நாள் தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையையும் அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ