Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 ஏப்ரல் (ஹி.ச)
சென்னை ஃப்ளவர் பஜார் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட செவன்வெல்ஸ் சி3 காவல் நிலைய எல்லைக்குள், தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி கண்காணிப்பு குழுவினர் நடத்திய சோதனையில், பதிவுசெய்யப்படாத தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
காலை சுமார் 7.00 மணியளவில் நார்த் வால் சாலை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக வந்த நான்கு சக்கர வாகனத்தை அதிகாரிகள் தடுத்து சோதனை செய்தனர்.
விசாரணையில், அந்த வாகனம் “சிக்வெல்” தனியார் நிறுவனத்திலிருந்து ராயபுரத்தில் உள்ள “ஜி.ஆர்.டி நகைக்கடை”க்கு தங்க நகைகளை கொண்டு செல்வதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததால், மொத்தம் 12.760 கிலோ எடையுள்ள தங்க நகைகள் (மதிப்பு ரூ.18 கோடியே 7 லட்சத்து 68 ஆயிரத்து 22) அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.
வாகனத்தை ஓட்டிய கிரண் (24) என்பவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.
இதுகுறித்து தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளை அதிகாரப்பூர்வமாக பெற்றுக்கொண்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ