Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 ஏப்ரல் (ஹி.ச)
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தான் போட்டியிட தாக்கல் செய்த பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் சொத்து விவரங்களில் பெரும் முரண்பாடு இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் வருமான வரித்துறைக்கு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாகக் கூறி, பெரம்பூர் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் விக்னேஷ் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, “இரு தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் சுமார் ரூ.100 கோடி அளவுக்கு சொத்து குறைத்து காண்பிக்கப்பட்டுள்ளது முறைகேடாகும் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், பெரம்பூர் தொகுதிக்கான வேட்புமனுவில் விஜய் ரூ.115.13 கோடி சொத்து உள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில் ரூ.220.15 கோடி சொத்து இருப்பதாக கூறியிருப்பது பெரிய முரண்பாடு என சுட்டிக்காட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து வருமான வரித்துறை விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கின் அடுத்த கட்ட விசாரணை பின்னர் நடைபெற உள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ