Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 20 ஏப்ரல் (ஹி.ச)
விருதுநகர் அருகே வி.முத்துலிங்காபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கட்டனார்பட்டியில் வனஜா பட்டாசு ஆலை உள்ளது.
டிஆர்ஓ உரிமம் பெற்ற இந்த ஆலையில் மொத்தம் 10 அறைகள் உள்ளன. இந்த ஆலையில் புஸ்வாணம், சங்கு சக்கரம் முதலான சிறிய ரக வெடிகள் தயாரிக்கப்படுகின்றன.
இந்த ஆலையில் விடுமுறை நாளான நேற்று மொத்தம் 36 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பிற்பகல் 3.10 மணியளவில், பட்டாசு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் வைத்திருந்த அறைப்பகுதியில் விதி மீறி தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது மருந்து உராய்வின் காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் அந்த அறை வெடித்து சிதறியது.
இதனைத்தொடர்ந்து அருகே இருந்த மற்ற 3 அறைகளுக்கும் தீ பரவியது. இதில் 4 அறைகளும் முற்றிலும் சேதமடைந்தன.
இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சிவகாசி, சாத்தூர், விருதுநகர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சவந்து சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.
இந்த வெடிவிபத்தில் உடல் கருகியும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியும் 23 பேர் உயிரிழந்தனர்.
இவர்களில் 19 பேர் நேற்று இரவு அடையாளம் காணப்பட்டனர். 4 பேர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
இந்நிலையில் இந்த விபத்தில் பலத்த தீக்காயம் அடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சேர்வைக்காரன் பட்டியைச் சேர்ந்த பேச்சியம்மாள் (51), திருத்தங்கலைச் சேர்ந்த பஞ்சவர்ணம் (56) ஆகியோர் உயிரிழந்தனர்.
இதையடுத்து இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 20 உடல்களுக்கு உடற்கூராய்வு நிறைவடைந்தது. 4 உடல்கள் அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடற்கூராய்வு பணிக்காக நெல்லை, மதுரையில் இருந்து 14 சிறப்பு மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b