முன்னாள் அமைச்சர்கள் மீது சொத்துக்குவிப்பு வழக்கு குற்றச்சாட்டு - தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை, 20 ஏப்ரல் (ஹி.ச.) சொத்துக்குவிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக, சட்டவிரோத பணபரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் (PMLA) வழக்குப்பதிவு செய்ய அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்
High court


சென்னை, 20 ஏப்ரல் (ஹி.ச.)

சொத்துக்குவிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக, சட்டவிரோத பணபரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் (PMLA) வழக்குப்பதிவு செய்ய அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் தீர்ப்பை, சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

திமுக எம்.பி. இரா. கிரிராஜன் தாக்கல் செய்த மனுக்களை, தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு விசாரித்தது.

விசாரணை முடிவில், வழக்கின் தீர்ப்பை பின்னர் வழங்க நீதிமன்றம் தள்ளிவைத்தது.

இந்த மனுக்களில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, பி. தங்கமணி, சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. காமராஜ், கே.சி. வீரமணி, கே.பி. அன்பழகன் உள்ளிட்டோர், மேலும் அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் உறவினர் சேலம் இளங்கோவன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா ஆகியோருக்கு எதிராக PMLA சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

விசாரணையின் போது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, “பொது தளங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தும், குறிப்பிட்ட சிலருக்கு எதிராக அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இது அவர்களின் கடமை தவறுதலாகும்.

இந்நிலையில் நீதிமன்றம் தலையிட்டு கேள்வி எழுப்ப முடியும் என்று வாதிட்டார்.

மேலும், அரசியல் கூட்டணியில் இருப்பதால் முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என். ரமேஷ், சட்டவிரோத பணபரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் நேரடியாக உத்தரவிட முடியாது.

அது அதிகாரிகளின் சுயாதீன முடிவாகும். மேலும், அரசியல் கட்சியைச் சேர்ந்த எம்.பி., எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக தாக்கல் செய்துள்ள இந்த வழக்குகள் அரசியல் உள்நோக்கத்துடன் செய்யப்பட்டவை என்று வாதிட்டார்.

இரு தரப்புகளின் வாதங்களையும் கேட்ட பிறகு, வழக்கின் தீர்ப்பை பின்னர் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ