சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வு
சென்னை, 20 ஏப்ரல் (ஹி.ச.) தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனிடையே அன்றைய தினம் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் வாக்கள
Omni Bus Fares Hike


சென்னை, 20 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனிடையே அன்றைய தினம் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை போன்ற பெருநகரங்களில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் வாக்களிக்க தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். அவர்களின் வசதிக்காக நாளை முதல் தமிழக போக்குவரத்து துறை சார்பில் 10 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் பயணிகளின் சூழ்நிலையை பயன்படுத்தி சில தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சென்னையில் இருந்து மதுரை, கோவை, சேலம், திருச்சி, நெல்லை மற்றும் நாகர்கோவில் போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்து கட்டணம் வழக்கத்தைவிட 2 முதல் 3 மடங்கு வரை அதிகரித்துள்ளது.

சாதாரண நாட்களில் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் தற்போது பல மடங்கு அதிகரித்து உள்ளது. இதனால் நடுத்தர மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகிஉள்ளனர்.

நாளை, நாளை மறுநாள் இரண்டு நாட்களும் சென்னையில் இருந்து நெல்லைக்கு படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனமில்லா பேருந்துகளில் அதிகபட்ச கட்டணம் ரூ.2,400 நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ரூ.3 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தூத்துக்குடிக்கு படுக்கைவசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகளில் அதிகபட்சமாக ரூ.2,700 நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் ரூ.3,200 வரையும், மதுரைக்கு அதிகபட்சமாக ரூ.2,200 நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் ரூ.2,400 முதல் 3,500 வரையும், திருச்சிக்கு அதிகபட்சமாக ரூ.1,500 நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் ரூ.2,000 முதல் 2,600 வரையும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b