பார்த்திபனுக்கு 'சாதி - மதமற்றவர்' என்ற சான்றிதழை வழங்க வேண்டும் - உயர் நீதிமன்றம்
சென்னை, 20 ஏப்ரல் (ஹி.ச) சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் பார்த்திபன் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 1958 ஜனவரி 14 ஆம் தேதி பிறந்த எனக்கு பிறப்பு சான்று இல்லை எனவும், பழைய எஸ்.எஸ்.எல்.சி (SSLC) படிப்பை முடித்த பின் சான்றுகளை பெறவில்லை. எனது சா
R Parthiban


சென்னை, 20 ஏப்ரல் (ஹி.ச)

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் பார்த்திபன் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 1958 ஜனவரி 14 ஆம் தேதி பிறந்த எனக்கு பிறப்பு சான்று இல்லை எனவும், பழைய எஸ்.எஸ்.எல்.சி (SSLC) படிப்பை முடித்த பின் சான்றுகளை பெறவில்லை.

எனது சாதி மற்றும் மதத்தை தெரிவிக்கும் பிறப்பு சான்றோ, கல்விச் சான்றுகளோ என்னிடம் இல்லை‘ என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘சாதி, மதம், மொழி அடிப்படையிலான பிளவுகள், தேச ஒற்றுமைக்கு பாதிப்பானது என்பதால், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ, சாதி - மதமற்றவர் என சான்று கோரி வேளச்சேரி வட்டாட்சியருக்கு விண்ணப்பித்ததாகவும், அந்த விண்ணப்பம் சோழிங்கநல்லூர் தாசில்தாரருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்’ தெரிவித்துள்ளார்.

தற்போது தேர்தல் பணிகள் காரணமாக தனது விண்ணப்பத்தை பரிசீலிக்க இயலவில்லை என வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்து வருவதால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தனது விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என நடிகர் பார்த்திபன் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.தண்டபாணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, ‘மதம் என்பது மனிதரின் தனிப்பட்ட விருப்பம். சாதி சான்றிதழ் என்பது இட ஒதுக்கீட்டுக்கானது மட்டுமே. சாதி அடையாளங்கள் தேவை இல்லை என்பது சிறந்த பண்பை காட்டுகிறது. அரசு அதிகாரிகள் அரசாணையில் என்ன இருக்கிறதோ? அதை அப்படியே செய்பவர்கள்.

அவர்களுக்கு சான்றிதழ் வழங்க தனிப்பட்ட அதிகாரம் இல்லை. பொதுவாக அரசாணை இருந்தால் அனைவருக்கும் சான்றிதழ் கிடைக்கும்.

அதிகாரம் இல்லாததால் தாசில்தார்களால் சான்றிதழ் வழங்க முடியாது’ என தெரிவித்த நீதிபதி, ‘சோழிங்கநல்லூர் தாசில்தார் 29 ஆம் தேதிக்குள் பார்த்திபனுக்கு 'சாதி - மதமற்றவர்' என்ற சான்றிதழை வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டார்.

Hindusthan Samachar / ANANDHAN