Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 ஏப்ரல் (ஹி.ச.)
சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நாளையுடன் முடிவடையும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் கடைசி நேர பிரச்சாரத்தில் வேகம் காட்டி வருகின்றன.
அந்த வகையில் பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் கார்த்திகேயன், தினமும் வீதி வீதியாகச் சென்று மக்களை சந்தித்து விவசாயி சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார்.
பல்லாவரம் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த மக்களின் தேவைகள் என்னென்ன? தங்களது திட்டங்கள் என்ன? என்பது குறித்து கார்த்திகேயன் பேட்டி அளித்தார்.
அவர் பேசுகையில்,
பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் மற்ற வேட்பாளர்கள் கடந்த 10 நாட்களாக தான் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
நான் கடந்த ஒரு வருடமாகவே தொகுதியில் பயணித்து வருகிறேன். பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தெரிந்து, விரல் நுனியில் வைத்துள்ளேன்.
உதாரணத்திற்கு, பல்லாவரம் தொகுதிக்குட்பட்ட குரோம்பேட்டையில் உள்ள படவேட்டம்மன் கோயில் குளம் பல வருடங்களாக தூர்வாரப்படாமல் கழிவுநீர் குட்டையாக மாறியுள்ளது. இது போன்று பல்லாவரம் தொகுதியில் உள்ள ஒவ்வொரு பகுதிகளிலும் என்ன பிரச்சினை இருக்கிறது என்பது குறித்து எனக்கு தெரியும். அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்ற திட்டங்களை நான் வகுத்துக்கொண்டிருக்கிறேன்.
பல்லாவரம் தொகுதியில் எனக்கு நல்ல ஆதரவு இருக்கிறது. இந்த தொகுதியில் பணக்காரர்கள், ஏழை என்றில்லாமல் அனைவருக்கும் குடிநீர் பிரச்சினை இருக்கிறது. நீர் மேலாண்மை திட்டத்தின் மூலம் குடிநீர் பிரச்சினைகளும் தீர்க்கப்படும், ஏரிகளும் மறுசீரமைக்கப்பட்டு பாதுகாக்கப்படும் என்றார்.
தொடர்ந்து, பல்லாவரம் தொகுதியில் அதிகப்படியானோர் பட்டா இல்லாமல் வசித்து வருகின்றனர். அவர்களை வெளியேற்ற அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் போராடி வருகின்றன.
இதனால் தான் இந்த தொகுதியை மறைமுகமாக அவர்கள் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கியுள்ளனர். எனவே நான் வெற்றி பெற்றவுடன் அவர்களுக்கு உடனடியாக பட்டாக்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,
பல்லாவரம் தொகுதியில் என்னை எதிர்த்துப் போட்டிடும் திமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர், அதிமுக கூட்டணி ஐஜேகே வேட்பாளர் யாரும் எந்த வேலையும் சரியாக செய்யவில்லை.
இவர்களை தொகுதி மக்களுக்கு யாரென்றே தெரியாத நிலை தான் உள்ளது. நாங்கள் கொள்கைக்காக கூட்டணி அமைக்காமல் தனித்து நிற்கிறோம் என்றார்.
தவெக குறித்து பேசிய கார்த்திகேயன்,
பல்லாவரம் தொகுதியை பொருத்தவரை சில இளைஞர்கள் திரை கவர்ச்சியில் இருக்கலாம். மற்றபடி, எல்லா இளைஞர்களும் தவெகவிற்கு பின்னால் இல்லை. அறிவு முதிர்ச்சியும், சிந்திக்கக்கூடிய திறன் உள்ள இளைஞர்கள் யாரும் தவெகவை தேர்ந்தெடுக்கவில்லை. வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவதற்கு முன்னால் அப்படி ஒருவர் கட்சியில் இருக்கிறாரா? என்பதே அந்த பகுதி மக்களுக்கு தெரியாது. பல்லாவரத்தை பொறுத்தவரை தேமுதிக, ஐஜேகே, தவெக வேட்பாளர்கள் என யாருக்கும் ஆதரவு கிடையாது. எங்களுக்கு தான் மக்களின் எழுச்சி உள்ளது
என்று கூறினார்.
Hindusthan Samachar / ANANDHAN