கொள்ளையடித்த பணத்தை வாக்காளர்களுக்கு கொடுக்கிறார்கள் - அன்புமணி விமர்சனம்
சேலம், 20 ஏப்ரல் (ஹி.ச.) சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் வெங்கடாஜலத்தை ஆதரித்து மேச்சேரியில் பாமக தலைவர் அன்புமணி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில் அன்புமணி பேசியதாவது: இந்த தேர்தல் நமக்கு மிக முக்கிய
கொள்ளையடித்த பணத்தை வாக்காளர்களுக்கு கொடுக்கிறார்கள் - அன்புமணி விமர்சனம்


சேலம், 20 ஏப்ரல் (ஹி.ச.)

சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் வெங்கடாஜலத்தை ஆதரித்து மேச்சேரியில் பாமக தலைவர் அன்புமணி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தில் அன்புமணி பேசியதாவது:

இந்த தேர்தல் நமக்கு மிக முக்கியமான தேர்தல், பாட்டாளிகளுக்கு மிக முக்கியத் தேர்தல். மேட்டூர் தொகுதியில் வெற்றிபெற்றால், ஆட்சி மாற்றம் நடக்கும், முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்பார், இது அவசியம் நடக்க வேண்டும். கொடுங்கோல் திமுக ஆட்சியை நாம் விரட்டியடிக்க வேண்டும். அதனால் தான் இந்தக் கூட்டணியில் சேர்ந்திருக்கிறோம்.

கொள்ளையடித்த பணத்தை வாக்காளர்களுக்கு கொடுக்கிறார்கள். தமிழகத்தில் 5.75 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். வாக்காளர் ஒருவருக்கு ரூ.2,000 என்றால் ரூ.12,000 கோடி கொடுக்கிறார்கள். ரூ 20,000 கோடி தேர்தலுக்கு செலவு செய்கிறார்கள்.

இங்கே ஒரு துரோகி உள்ளார், அவர் தான் ஜி.கே.மணி. ஸ்டாலின், அவருடைய மகன் உதயநிதி, மருமகன் சபரீசன் ஆகியோர், நமது குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்கி திமுக வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஜி.கே.மணியும் அவர் பிள்ளையும், ஸ்டாலினும் அவர் மகனும் நன்றாக இருக்க வேண்டும், நாம் நன்றாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்கள்.

கடந்த 5 ஆண்டுகளில் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைச் செய்து கொண்டிருக்கிற ஆட்சி திமுக. தமிழ்நாட்டின் தாய்மார்கள் ஒருவர்கூட திமுகவுக்கு ஓட்டு போடக்கூடாது. கலைஞர் திமுக வேறு, ஸ்டாலின் திமுக வேறு. ஸ்டாலினுக்கு என்ன நடக்கிறதென்று தெரியவில்லை. அவரை பொம்மையாக வைத்து கொண்டு, சுற்றிலும் இருப்பவர்கள் கொள்ளையடித்து கொண்டு இருந்தனர். மாற்றம் வந்தால்தான் மக்களை காப்பாற்ற முடியும். எடப்பாடி பழனிசாமி விவசாயி, முதல்வராக வந்தால்தான் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

சிலிண்டருக்கு மானியம் கொடுப்பதாக சொல்லி ஏமாற்றிய திமுகவினர், ரூ.20,000 கோடியை 20 நாளில் செலவழிக்கிறார்கள் என்றால் எவ்வளவு கொள்ளையடிப்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு கொடுத்தார், அதனைக் கெடுத்த துரோகி ஸ்டாலின்.

மத்திய அரசு 3 நாட்களுக்கு முன்பு ஒரு சட்டம் கொண்டுவந்தது. பெண்கள் படிக்க, வேலைக்குப் போக, எம்எல்ஏ, எம்.பி. ஆக வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தது. ஆனால், ஸ்டாலின் அந்த சட்ட நகலை கருப்புச் சட்டை போட்டுக்கொண்டு தீயிட்டு கொளுத்தினார். கருப்புச் சட்டை போட்டு கொளுத்தினால் அது எவ்வளவு பெரிய தேசத் துரோக செயல், வேறு யாராக இருந்திருந்தால் சிறையில் இருந்திருப்பார்காள். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

பெண்கள் முன்னேறுகின்ற சட்டத்தை நாடாளுமன்றத்தில் தோற்கடித்து, பட்டாசு வெடித்து ஸ்டாலின் கொண்டாடுகிறார். இந்தச் சட்டம் அமலாகியிருந்தால் 39 எம்.பி 59 ஆக உயர்ந்திருக்கு. அவ்வாறாக உயர்ந்திருந்தால் 20 பெண்கள் நாடாளுமன்றத்திற்கும், 117 பெண்கள் சட்டப்பேரவைக்கும் உறுப்பினர்களாக வர முடியும். பெண்கள் எம்எல்ஏ, எம்.பி ஆகக்கூடாது, அப்படி நடக்கக்கூடாது என்று ஸ்டாலின் வன்மத்தில் இருக்கிறார்.

ஐந்து ஆண்டு சாதனையை சொல்லி ஓட்டு கேட்பதை விட்டுவிட்டு ரூ.8,000 கூப்பன் கொடுப்பதாக சொல்லி ஓட்டு கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஸ்டாலின் குடும்பம் தவிர தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களும் ஏழைகளாகத்தான் இருக்கிறார்கள்.

ஒரு குடும்பத்திடம் இருக்கிற பணத்தை வைத்து தமிழ்நாட்டின் பட்ஜெட்டை போட முடியும். இங்கு, திமுக வேட்பாளர் டெபாசிட் இழக்க வேண்டும், இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Hindusthan Samachar / vidya.b