Enter your Email Address to subscribe to our newsletters



சென்னை, 20 ஏப்ரல் (ஹி.ச.)
மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில், தி.மு.க. வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியன் அவர்களின் ஆதரவாளரிடமிருந்து ரூ.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இணைந்து, பணம் வைத்திருந்த நபரை பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட தொகை ரூ.50 லட்சம் அல்ல, ஒரு கோடி ரூபாய் இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக, திருப்பரங்குன்றம் தொகுதியில் காவல் துறையினர் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இதுகுறித்து, தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் என். ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், தேர்தல் ஆணையம் உடனடியாக முழுமையான விசாரணை நடத்தி, வாக்காளர்களுக்கு பணம் வழங்க முயற்சி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள தி.மு.க. வேட்பாளர் மீது தகுதி நீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், தேர்தல் காலத்தில் வாக்காளர்களை பணம் மூலம் கவர முயற்சிகள் நடைபெறுவதாக குற்றம்சாட்டிய அவர், இதுபோன்ற செயல்களை மக்கள் கவனித்து வருவதாகவும், இந்த தேர்தலில் மக்கள் தக்க பதிலை அளிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ