விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து - இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் வழக்கு
மதுரை, 20 ஏப்ரல் (ஹி.ச.) விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 25 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க கோரி மதுரை அமர்வில் முறையீடு செய்யப்பட்டுள்ள
உயர்நீதிமன்றம்


மதுரை, 20 ஏப்ரல் (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 25 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க கோரி மதுரை அமர்வில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை வழக்கறிஞர் கருணாநிதி தாக்கல் செய்தார். இம்மனு மதுரை அமர்வு உயர்நீதிமன்றம் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், விபத்து நடந்தது பல நாட்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்தல் காலம் காரணமாக அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்யவில்லை.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடும் இதுவரை வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கு நீதிபதிகள்,

இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, அதில் அரசுக்கு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும், சரியான வழிகாட்டுதல்கள் தேவை.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதில் ஏன் தாமதம்? என கேள்வி எழுப்பினர்.

அரசு தரப்பில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மற்றும் முக்கிய அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளதால் உடனடி விளக்கம் அளிக்க முடியவில்லை.

இதற்காக சிறிது கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக உரிய விளக்கம் பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்க அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P