இலங்கையால் விடுவிக்கப்பட்ட 19 தமிழக மீனவர்கள் சென்னை வருகை
சென்னை, 21 ஏப்ரல் (ஹி.ச.) கடல் எல்லையைக் கடந்து மீன்பிடித்ததாகக் கூறி ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 19 மீனவர்கள், மார்ச் மாதம் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருந்தனர். கடந்த மார்ச் 25-ம் தேதி கைது செய்யப்பட்ட இந்த மீனவர்கள், இலங்கை
19 Tamil Nadu Fishermen Released


சென்னை, 21 ஏப்ரல் (ஹி.ச.)

கடல் எல்லையைக் கடந்து மீன்பிடித்ததாகக் கூறி ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 19 மீனவர்கள், மார்ச் மாதம் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கடந்த மார்ச் 25-ம் தேதி கைது செய்யப்பட்ட இந்த மீனவர்கள், இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சட்ட நடவடிக்கைகளுக்குப் பின்னர், 19 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.

மொத்தம் 30 மீனவர்கள் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களுக்கு முகாமில் தங்க வைக்கப்பட்டு அவசர பயண ஆவணங்கள் வழங்கப்பட்டன.

பின்னர் அவர்கள் விமானம் மூலம் நேற்று இரவு சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். சென்னையில் மீன்வளத்துறை அதிகாரிகள் அவர்களை வரவேற்று சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தனர்.

தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் செபாஸ்டியன் கூறுகையில்,

நாங்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டோம். இந்திய துணை குடியரசுத் தலைவரின் வருகையை ஒட்டி நாங்கள் விடுவிக்கப்பட்டோம்.

தங்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. இலங்கையில் இன்னும் சிறையில் உள்ள மற்ற மீனவர்களையும் விடுவிக்க அரசு தலையிட வேண்டும் .

இரண்டு மீனவர்களுக்கு தலா ரூ.25,000 அபராதமும், இரண்டு படகுகளின் ஓட்டுநர்களுக்கு தலா ரூ.40 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்தத் தவறினால் மூன்று மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும். தினக்கூலிகளான எங்களால் இவ்வளவு பெரிய அபராதத் தொகையை செலுத்த முடியாது.

தொடர்சியான கைதுகள் மற்றும் 30 மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் அச்சுறுத்தல் காரணமாக மீண்டும் கடலுக்குச் செல்வது கடினமாக உள்ளது. வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

எனவே மத்திய, மாநில அரசுகள் மாற்று வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டும் என்றும், சுயதொழில் செய்வதற்கு வங்கிக் கடன் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.

தொடர் கைதுகளால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகக் கூறிய மீனவர்கள், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b