Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 21 ஏப்ரல் (ஹி.ச.)
மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு உட்பட அனைத்து கோயில்களில் குடமுழுக்கின்போது சமஸ்கிருத மந்திரத்துக்கு இணையாக தமிழ் மந்திரங்களையும் பயன்படுத்த உத்தரவிடக் கோரி கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை நீதிபதி பரதசக்கரவர்த்தி இன்று விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் எம்.கே.சுரேஷ், திலக கார்த்திகா வாதிட்டனர்.
பின்னர் நீதிபதி கூறுகையில்,
மதுரை சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மாநகரம். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பொற்றாமரை குளத்தில் தான் திருக்குறள் அரங்கேற்றப்பட்டதாக வரலாறு கூறுகிறது. பொற்றாமரை குளத்துக்கு தமிழ் இருக்கை என்றும் பெயர் உள்ளது.
தமிழுக்கு சிறப்பு செய்யும் மதுரையில் மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் மற்ற கோயில்களை விட தமிழ் மந்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும்.
கோயில் குடமுழுக்கு தொடர்பாக உயர் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த உத்தரவு நகல் தமிழிலும் வழங்கப்படும். விசாரணை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b