கருத்தடை அறுவை சிகிச்சையில் பெண் உயிரிழப்பு – மருத்துவ அலட்சியம் குற்றச்சாட்டு
சென்னை, 21 ஏப்ரல் (ஹி.ச.) சென்னை எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் கடந்த 10ஆம் தேதி பிரியதர்ஷினி என்ற பெண் கருத்தடை அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சைக்கு முன்பு அவருக்கு அதிக அளவில் அனஸ்தீசியா வழங்கப்பட்டதாக குடும்பத
Kkk


சென்னை, 21 ஏப்ரல் (ஹி.ச.)

சென்னை எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் கடந்த 10ஆம் தேதி பிரியதர்ஷினி என்ற பெண் கருத்தடை அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அறுவை சிகிச்சைக்கு முன்பு அவருக்கு அதிக அளவில் அனஸ்தீசியா வழங்கப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இதை சம்பந்தப்பட்ட மருத்துவர் ஒப்புக்கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிரியதர்ஷினி சுயநினைவிற்கு வராமல் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும், அவரை பார்க்க குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இரண்டு நாட்கள் கழித்து தேவையான மருத்துவ வசதிகள் இல்லை என கூறி, அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், முதலில் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டதாகவும், பின்னர் டயாலிசிஸ் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து அவரது உடல் உறுப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக செயலிழந்த நிலையில், இறுதியாக மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பிரியதர்ஷினியின் கணவர் விவேக், வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி பிரியதர்ஷினி உயிரிழந்தார்.

சிகிச்சை விவரங்கள் குறித்து மருத்துவர்கள் தெளிவான விளக்கம் அளிக்கவில்லை என்றும், தனது மனைவிக்கு என்ன நடந்தது என்பது முழுமையாக தெரியும்வரை உடலை பெற்றுக்கொள்ள மாட்டேன் என்றும் அவரது கணவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ