Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 ஏப்ரல் (ஹி.ச)
சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், தன்னை தந்தையும் அவருடன் தொடர்புடைய ஒருவர் சேர்ந்து கொடுமைப்படுத்தியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்துள்ள புகாரில், தனது தாய் குடும்ப வன்முறையை தாங்க முடியாமல் வீட்டை விட்டு சென்றதாகவும், அதன் பிறகு தந்தை தன்னையும் தம்பியையும் வளர்த்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் காலப்போக்கில் தந்தை தன்னிடம் உடல் மற்றும் மன ரீதியான சித்ரவதை மேற்கொண்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், தந்தையின் நண்பர் என அறிமுகமான ஒரு அரசியல் கட்சி தொடர்புடைய நபர் வீட்டிற்கு வந்து தன்னிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதை தந்தையிடம் கூறியபோதும் அவர் பொருட்படுத்தாமல் “அட்ஜஸ்ட் பண்ணிக்கோ” என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலாக, தந்தை தன்னை ஆண் நண்பர்களுடன் தொடர்பில் இருந்து பணம் வாங்குமாறு கட்டாயப்படுத்தியதாகவும், அதை மறுத்ததால் தன்னை அடித்து துன்புறுத்தியதுடன், இடது தொடையில் சிகரெட்டால் சூடு வைத்ததாகவும் இளம்பெண் குற்றம் சாட்டியுள்ளார். பின்னர் தன்னை வீட்டிலிருந்து வெளியேற்றியதாகவும் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக தந்தையும், குற்றம்சாட்டப்பட்ட நபருமான விஜி மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ