Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 21 ஏப்ரல் (ஹி.ச.)
சிவகாசியை சேர்ந்த சமுத்திரவள்ளி உள்ளிட்டோர், 2014ஆம் ஆண்டு பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த தனது கணவரின் மரணத்திற்கு இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கில் முன்னதாக நீதிபதி புகழேந்தி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப் பணி, விதவை ஓய்வூதியம், வீடு உள்ளிட்ட மறுவாழ்வு உதவிகளை வழங்க உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு, “பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அரசு இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கிறது? இது கவலைக்குரியது எனக் கேள்வி எழுப்பினர்.
அரசு தரப்பில், விருதுநகர் பகுதியில் நடைபெற்ற வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடும், இறுதிச்சடங்கிற்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கு நீதிபதிகள், “தொழிலாளர்களுக்கு ரூ.25 முதல் 30 லட்சம் வரை காப்பீடு செய்யப்பட்ட பின்னரே பணியில் ஈடுபடுத்த வேண்டும். விபத்துகளில் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்” எனக் குறிப்பிட்டனர்.
மேலும், ஏப்ரல், மே, ஜூன் மாத கோடை காலங்களில் பட்டாசு உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்துவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
பட்டாசு ஆலை விபத்துகளை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகள் அளிக்க வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கை ஜூன் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Hindusthan Samachar / GOKILA arumugam