Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 21 ஏப்ரல் (ஹி.ச.)
கோவை சிங்காநல்லூர் அதிமுக வேட்பாளர் கே ஆர் ஜெயராமை ஆதரித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது மக்கள் மத்தியில் பேசிய வேட்பாளர் கே ஆர் ஜெயராம், அண்ணாமலையை வருங்கால மத்திய அமைச்சர் என்று குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் போதை பொருட்கள் ஒழிய வேண்டும் கஞ்சா ஒழிய வேண்டும் பாலியல் தொல்லைகள் ஒழிய வேண்டும் என்று தெரிவித்தார். டபுள் இன்ஜின் சர்க்காரை உருவாக்குவதற்காக ஆந்திரா முதல்வர் கூட தமிழகத்திற்கு வந்து தமிழகத்தில் திமுக ஒழிய வேண்டும் என்று கோஷமிட்டு சென்றதாக தெரிவித்தார்.
மத்திய அரசுடன் ஆந்திர அரசு இணக்கமாக இருந்து பல்வேறு திட்டங்களை செய்து வருவதாக தெரிவித்தார். நாமும் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் அனைத்து திட்டங்களையும் கேட்டு பெற முடியும் என்று கூறினார்.
ஒரு குடும்ப ஆட்சி ஒழிய வேண்டும் சாதாரண மனிதரும் ஜனாதிபதியாக வேண்டுமென்றால் அது பாஜகவால் தான் முடியும் என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை ஐந்தாண்டு காலம் நமக்கு ஏற்பட்ட பிரச்சனையை ஒரு நிமிடம் நாம் ஞாபகத்தில் வைத்துக் கொண்டாலே போதும் என்று கூறினார்.
மேலும் ஐந்து ஆண்டு காலத்தில் மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள், திமுகவை பொருத்தவரை தைரியமாக சொன்னதை செய்யாமல் மீண்டும் வாக்கு சேகரிக்க வந்துள்ளார்கள் என்று விமர்சித்தார்.
தமிழகத்தில் முதல் பிரச்சனை முதல்வர் ஸ்டாலினால் தான் என்றும் அடுத்த பிரச்சனை அவரது குடும்பத்தினால் என்றும் மூன்றாவது பிரச்சனை அவருக்கு கீழ் உள்ள காவல்துறையால் என்றும் தெரிவித்த அவர் முதல்வராக ஒருவரை தேர்ந்தெடுத்து அமர வைக்கும் போது அடிப்படை விஷயங்கள் சிலவற்றை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் ஆனால் பல்வேறு விஷயங்களில் முதலமைச்சர் தவறி இருக்கிறார் என்று கூறினார்.
கோவை மதுரை திருச்சி தூத்துக்குடி போன்ற பல்வேறு விமான நிலையங்களை கட்டி திறந்து வைத்து விட்டோம் ஆனால் கோவையை பொருத்தவரை தற்பொழுது வரை ஐந்து ஏக்கர் நிலத்தை கூட கொடுக்காமல் இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
இதனால் கோவையின் வளர்ச்சி தடைபட்டு இருப்பதாகவும் கூறினார்.
இந்தியாவிலேயே பொருளாதாரத்தின் முதன்மையான மாவட்டம் கோவை என்று குறிப்பிட்ட அண்ணாமலை தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு வேலை வாய்ப்புகளை இங்கே கொண்டு வர வேண்டும் எனவே அடுத்த ஐந்தாண்டு காலம் நமக்கான ஒரு வாய்ப்பு எனவே அடுத்த ஐந்தாண்டு காலத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது என்றார். மாற்றத்தை காண வேண்டும் என்று ஒரு வாக்களித்தோம் என்றால் அடுத்து வரக்கூடியவருக்கு ஒரு செயல் திறமை தொலைநோக்கு பார்வை செயல்படுத்துவதற்கு ஆட்கள் இருக்க வேண்டும் என்றும் கூறினார். அதிமுகவில் செயல் திறமை தொலைநோக்கு பார்வை செயல்படுத்துவதற்கான ஆட்கள் அனைவரும் இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் திட்டங்களை தருவதற்கு மோடி இருக்கிறார். செயல்படுத்துவதற்கு எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார் என்றும் சிங்காநல்லூரில் சரித்திர வெற்றியை பதிவு செய்ய வேண்டும் சிங்காநல்லூரில் அதிமுக வேட்பாளர் கே ஆர் ஜெயராம் மட்டும்தான் இருக்கிறார் எதிர் வேட்பாளர்கள் யாரும் இல்லை என்று எதிர்க்கட்சி வேட்பாளர்களை விமர்சித்தார்.
20-20 கிரிக்கெட் போட்டியில் கூட 18 ஓவர்கள் ஆடினாலும் கடைசி இரண்டு ஓவர்கள் தான் முக்கியம் அதுதான் வெற்றியையும் தீர்மானிக்கும் என்று கூறினார்.
எனவே தேர்தலுக்கு இரண்டு நாட்கள் தான் உள்ளது அனைவரும் சேர்ந்து பணியாற்றி வெற்றி பெற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
Hindusthan Samachar / ANANDHAN