தென்காசி மாவட்டத்தில் 8,064 பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் - தென்காசி ஆட்சியர்
தென்காசி, 21 ஏப்ரல் (ஹி.ச.) சட்டமன்ற தேர்தலானது நாளை மறுநாள் தமிழகம் முமுவதும் ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷ
Tenkasi Collector Kamal Kishore


தென்காசி, 21 ஏப்ரல் (ஹி.ச.)

சட்டமன்ற தேர்தலானது நாளை மறுநாள் தமிழகம் முமுவதும் ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது, அவர் தெரிவிக்கும்போது தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 1,680 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் வாக்குச்சாவடி ஒன்றிற்கு 4 பணியாளர்கள் வீதம் ஒதுக்கப்பட்டு கூடுதலாக 20 சதவீத பணியாளர்களுடன் இந்த பணியில் 8,064 அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்கும் வசதி வழங்கப்பட்ட நிலையில், அதன் மூலம் 5,923 வாக்காளர்கள் மேற்படி வசதியை பயன்படுத்தி வாக்களித்துள்ள தாகவும், மீதமுள்ள மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் தேர்தல் அன்று பொது வரிசையில் காத்திருந்து வாக்களிக்க தேவை இல்லை எனவும், அவர்களுக்கான தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலான நாள் முதல் தற்போது வரை ரூ.1 கோடியே 5 லட்சத்து 59 ஆயிரத்து 597 ரூபாய் பணமும், 8 லட்சத்து 35 ஆயிரத்து 232 ரூபாய் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் மற்றும் 63 ஆயிரத்து 385 ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் என ஒட்டுமொத்தமாக ரூ.1 கோடியே 14 லட்சத்து 58 ஆயிரத்து 232 ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா தொடர்பான புகார்கள் வரப்பட்டு 15 நிமிடங்களில் அந்த பகுதிக்கு சென்று நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பண பட்டுவாடா செய்யப்படாமல் தடுக்க பறக்கும் படையினர் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அவர், 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாகவும் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களும் தேர்தல் ஆணையம் சார்பில் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அதேபோல், வாக்கு பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான ஸ்ரீராம் நல்ல மணி யாதவா கல்வி நிறுவன வளாகத்திற்கு எடுத்துவரப்பட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் தமிழக காவல்துறையினர் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும், மூன்று அடுக்கு பாதுகாப்பில் அந்த இயந்திரங்களானது பாதுகாப்பாக வைக்கப்படும் எனவும், மே 4-ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணியானது தொடங்கும் எனவும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN