2026 தமிழக சட்டமன்ற தேர்தல் - கந்தர்வக்கோட்டை தொகுதி கள நிலவரம்
புதுக்கோட்டை, 21 ஏப்ரல் (ஹி.ச.) புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள கந்தர்வக்கோட்டை வரலாற்று ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது. கந்தர்வக்கோட்டை முற்காலத்தில் ஒரு பாளையப்பட்டாக (ஜமீன்) இருந்தது. இப்பகுதியை அச்சுத
2026 தமிழக சட்டமன்ற தேர்தல் - கந்தர்வக்கோட்டை தொகுதி கள நிலவரம்


புதுக்கோட்டை, 21 ஏப்ரல் (ஹி.ச.)

புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள கந்தர்வக்கோட்டை வரலாற்று ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது.

கந்தர்வக்கோட்டை முற்காலத்தில் ஒரு பாளையப்பட்டாக (ஜமீன்) இருந்தது.

இப்பகுதியை அச்சுதப்பண்டாரத்தார் என்ற பட்டம் கொண்ட கள்ளர் மரபினர்கள் ஆண்டு வந்தனர். சுமார் 400 ஆண்டுகள் பழமையான ஜமீன் அரண்மனை இடிபாடுகளுடன் இன்றும் இங்கு வரலாற்றுச் சின்னமாக உள்ளது.

ஸ்ரீ கோதண்ட ராமர் கோயில் சோழர் காலத்தில் (கண்டராதித்த சோழன்) கட்டப்பட்ட சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கோயிலாகும். ஒவ்வொரு தமிழ் மாதமும் 21, 22, 23 ஆகிய தேதிகளில் அதிகாலையில் சூரிய ஒளி மூலவர் ராமரின் பாதங்களில் விழுந்து வணங்குவது போன்ற அமைப்பு இக்கோயிலின் தனிச்சிறப்பு.

இங்கு 1000 ஆண்டுகள் பழமையான பழமை வாய்ந்த சிவன் கோயிலும் அமைந்துள்ளது. ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில், காமாட்சி அம்மன் கோயில், ஐயப்பன் கோயில் மற்றும் புகழ்பெற்ற தேவாலயங்கள், மசூதிகள் என அனைத்து மதத்தினரும் வழிபடும் இடங்கள் இங்கு உள்ளன.

கந்தர்வக்கோட்டை தன்னைச் சுற்றியுள்ள சுமார் 36 கிராம மக்களுக்கு ஒரு முக்கிய வணிக மற்றும் போக்குவரத்து மையமாகத் திகழ்கிறது. இது தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய இரு முக்கிய நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில் (NH 36) மிகச் சரியான நடுப்பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியின் முதன்மையான தொழில் விவசாயம் ஆகும்.

வாக்காளர்கள் எண்ணிக்கை

ஆண்கள் - 98,651

பெண்கள் - 97,444

இதரர் - 9

மொத்தம் - 1,96,104

இத்தொகுதியில் முக்குலத்தோர், முத்தரையர், பட்டியலினத்தவர், யாதவர், வெள்ளாளர் பிரதானமாக உள்ளனர்.

அரசியல் நிலவரம்

தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு நடைபெற்ற 3 தேர்தல்களில் 2 தேர்தல்களில் அதிமுகவும், கடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வென்றன.

கடந்த தேர்தலில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.சின்னதுரை 69,710 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எஸ்.ஜெயபாரதி 56,989 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

அமமுக வேட்பாளர் பி.லெனின் 12,840 வாக்குகள், நாதக வேட்பாளர் எம்.ரமிலா 12,661 வாக்குகள், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் வேட்பாளர் பழ.ஆசைத்தம்பி 1,271 வாக்குகள் பெற்றனர். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.சின்னதுரை போட்டியிடுகிறார்.

அதேபோல, அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளர் சி.உதயகுமார் போட்டியிடுகிறார். இருவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்த பங்காளிகளாவர். கடந்த 2 தேர்தல்களில் போட்டியிட்ட அனுபவம், அதிமுக வாக்குகளை தவெக வேட்பாளர் என்.சுப்பிரமணியன் பிரிப்பது, 5 ஆண்டுகள் தொகுதியில் செய்த பணிகள் மற்றும் திமுக கூட்டணியின் பலத்தால் தொகுதியை மீண்டும் தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் எம்.சின்னதுரை உள்ளார்.

கடந்த தேர்தலில் 12,721 வாக்குகள் வித்தியாசத்தில்தான் சின்னதுரை வெற்றி பெற்றார். எனவே, அந்த தேர்தலில் 12,840 வாக்குகள் பெற்ற அமமுக, அதிமுக கூட்டணியில் இருப்பதும், குடிநீர், சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள்கூட கிடைக்கவில்லையே என்ற அதிருப்தி, மக்களிடையே பாகுபாடு காட்டியதாக எழுந்துள்ள அதிருப்தி வாக்குகளும் தனக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தும் என பாஜக வேட்பாளர் சி.உதயகுமாரின் கணிப்பாக உள்ளது.

இவர்களுக்கு, கொஞ்சமும் சளைக்காமல் தவெக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான என்.சுப்பிரமணியன், நாதக வேட்பாளர் டி.நதியாவும் களத்தில் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

மக்களின் எதிர்பார்ப்புகள்

முந்திரி பருப்பில் இருந்து மதிப்புக் கூட்டு பொருள் தயாரிப்பு தொழிற்சாலை ஏற்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனை, தகர ஷெட்டுக்குள் செயல்பட்டு வரும் பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும்.

காவிரி பாசன வசதி ஏற்படுத்த வேண்டும்.

நூலகங்களை போட்டித் தேர்வு பயிற்சி மையங்களாக மேம்படுத்த வேண்டும்.

கறம்பக்குடியில் சுற்றுவட்டச் சாலை அமைக்க வேண்டும்.

சிப்காட் தொழிற்பேட்டை பணிகளை தொடங்க வேண்டும்.

கிராமங்கள் தோறும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகளை இத்தொகுதி மக்கள் வைத்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b