Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 21 ஏப்ரல் (ஹி.ச.)
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வெண்பாக்கம் தாலுக்காவிற்குட்பட்ட பிரம்மதேசம் அருகே உள்ள கல்பட்டு கிராமத்தில், சிறுமி ஒருவருக்கு எதிராக நடைபெற்றதாக கூறப்படும் கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, தனது பாட்டி வீட்டிற்கு வந்திருந்த நிலையில், மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்பட்டு கிராமம் அருகே சென்றுகொண்டிருந்த அந்த நேரத்தில், அடையாளம் தெரியாத சிலர் சிறுமியை வழிமறித்து தாக்கி, கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. சம்பவத்துக்குப் பிறகு உடல்நலக்குறைவு ஏற்பட்ட சிறுமி உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில், கூடுதல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிரம்மதேசம் காவல் நிலைய போலீசாரும் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார், அவர்கள் எங்கு உள்ளனர் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. சிறுமிகளின் பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் மத்தியில் மீண்டும் கவலை எழுந்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN