Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை மறுநாள் ஏப்ரல் 23ம் தேதி அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி இன்று (செவ்வாய்க் கிழமை) மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது.
தேர்தல் இந்தமுறை 4 முனை களமாக உள்ள நிலையில், கடந்த சில வாரங்களாகவே பிரதான அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழக அரசியலின் புதிய வரவான விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியினருக்கு ரோடு மூலமாக தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்றைய தினம் கூட திருவள்ளூர் மாவட்டம் மற்றும் சென்னையின் வில்லிவாக்கம், கொளத்தூர், ஆர்.கே. நகர், தி நகர் உள்ளிட்ட இடங்களில் பிரச்சராம் செய்தார். அதன் தொடர்ச்சியாக இன்றைய தினமும் சென்னையில் தனது கடைசி நாள் பிரச்சாரத்தை விஜய் மேற்கொள்கிறார்.
இது தொடர்பாக தவெக தலைமை நிலையச் செயலக அறிவிப்பில் கூறியதாவது,
அனைவருக்கும் வணக்கம். மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், வெற்றித் தலைவர், (21.04.2026, செவ்வாய்க்கிழமை) சென்னையில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.மதியம் 12 மணி முதல், பாலவாக்கம் அம்பேத்கர் சிலை, திருவான்மியூர் நாகாத்தம்மன் கோவில் சந்திப்பு, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் அண்ணா சாலை கலைஞர் வளைவு - ஜூனிஸ் சாலை சந்திப்பு ஆகியவற்றின் வழியாக, மக்களின் வெற்றித் தலைவர் அவர்கள் வாகனப் பிரசாரம் மேற்கொள்ளத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.
தொடர்ந்து, பிற்பகல் 3 மணிக்கு, சைதாப்பேட்டை நந்தனம் YMCA மைதானத்தில் வெற்றித் தலைவர் அவர்கள் கலந்துகொள்ளும் கழக நிர்வாகிகள் கூட்டம் நடத்தத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக, தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பிரசாரத்தில் கலந்துகொள்ள வரும் கழகத் தலைவர் அவர்களின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் யாரும், கண்டிப்பாகப் பின்தொடரக் கூடாது. இதை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும். நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் கழக நிர்வாகிகள் கூட்டத்திற்கு, QR கோடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ள 5000 நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். தேர்தல் ஆணைய விதிகளைப் பின்பற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், இந்தத் தேர்தல் பிரசார நிகழ்வுகளில், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என அக்கட்சியின் பொதுச்செயலாளரான என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P