Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 22 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்ட வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தேர்தல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:
நாளை, ஏப்ரல் 23 (வியாழக்கிழமை), ஜனநாயகத் திருவிழாவின் மிக முக்கியமான நாளாகும். தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 1,868 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர்கள் எவ்வித அச்சமுமின்றி, பாதுகாப்பாக வந்து வாக்களிக்கத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மாவட்டத்தின் வாக்குப்பதிவு சதவிகிதத்தை உயர்த்த வலியுறுத்திய ஆட்சியர், மேலும் கூறியதாவது: நமது மாவட்டத்தை 100 சதவீதம் வாக்களித்த மாவட்டமாக மாற்றுவது ஒவ்வொரு குடிமகனின் கைகளிலும் உள்ளது. வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, அது நமது முதன்மையான கடமையாகும்.
தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டின் பெருவிழா என்பதை மனதில் கொண்டு அனைவரும் வாக்குச்சாவடிக்கு வருகை தர வேண்டும். பொதுமக்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி, தூத்துக்குடி மாவட்டத்தை முன்மாதிரி மாவட்டமாக மாற்ற ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தேர்தலை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் விதிமீறல்களைத் தடுக்கவும், பணப் புழக்கத்தைக் கண்காணிக்கவும் 24 மணி நேரமும் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்குப்பதிவு நாளை காலை 07:00 மணி முதல் மாலை 06:00 மணி வரை நடைபெறும். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், தேர்தல் ஆணையம் அங்கீகரித்த 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம்.
தூத்துக்குடி மாவட்டத்தை 100 சதவீத வாக்குப்பதிவு செய்த மாவட்டமாக மாற்ற ஒவ்வொரு வாக்காளரும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றுவது அவசியம். எவ்வித அச்சமுமின்றி மக்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்கலாம்.
என ஆட்சியர் விஷு மகாஜன் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b