Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் விமானங்களின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
சென்னை- தூத்துக்குடிக்கு சாதாரண நாட்களில் ரூ.5,354 கட்டணமாக உள்ள நிலையில் இன்று 17,527ரூபாயாக உயர்ந்துள்ளது.
அதேபோல் சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.13,320, திருச்சிக்கு ரூ.14,237, சென்னை- கோவைக்கு ரூ.12,027ஆக உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
பெரும்பாலான விமானங்களில் டிக்கெட்டுகள் தீர்ந்ததால் பயணிகள் தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.
இதேபோல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் மற்றொரு மாநிலமான மேற்கு வங்கத்திலும் விமான கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
வெளிமாநிலங்களில் இருந்து கொல்கத்தா செல்லும் விமானங்களில் கட்டணம் உயர்த்தப்பட்டது. ஏற்கனவே தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதால் சென்னையில் வாழும் வெளி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ள நிலையில், விமான கட்டணமும் உயர்த்தப்பட்டிருப்பது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
தமிழ்நாடு அரசும் மத்திய அரசும் இணைந்து விமான மற்றும் ஆம்னி பேருந்துகளில் கட்டணத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்போதுதான் தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கும் என்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P