Enter your Email Address to subscribe to our newsletters

கோவை , 22 ஏப்ரல் (ஹி.ச.)
கோவை நகரில் பல பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன.
அதனால்,தேர்தலை ரத்து செய்ய கோரி அ.தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், கோவை தெற்கு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் வக்கீல் அணியினர், கோவை அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த தேர்தல் பொதுப் பார்வையாளர் பிரதாப் சிங்கை சந்தித்து மனு வழங்கினர்.
அந்த மனுவில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் வீடு தோறும் சென்று வாக்காளர்களுக்கு பணம் வழங்கி வருவதாகவும், பணம் பெற்றவர்கள் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என அச்சுறுத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், இத்தகைய தேர்தல் விதிமுறை மீறல்கள் தொகுதி முழுவதும் நடைபெற்று வருவதால், கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தனிநபர்கள் சார்பிலும் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பணப்பட்டுவாடா குறித்த பல புகார் மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA