Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 22 ஏப்ரல் (ஹி.ச.)
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகா, குண்டடம் ஒன்றியத்திற்குட்பட்ட சடையபாளையம் பஞ்சாயத்தில் உள்ள நிறையூர் கிராம மக்கள், அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்து தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
ஆனால் கடந்த 35 ஆண்டுகளாக குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் எதுவும் முறையாக ஏற்படுத்தப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்தாலும், நிரந்தர குடிநீர் திட்டம் அமல்படுத்தப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
குடிநீர் வசதி இல்லாததால், கிராம மக்கள் தினமும் 20 லிட்டர் கேன்களில் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் ஏற்கனவே பொருளாதார சிக்கலில் இருக்கும் குடும்பங்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது.
மேலும், வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்படாததும் மக்கள் அதிருப்தியை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து பலமுறை அரசு அதிகாரிகளுக்கும், அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
இதனால் விரக்தியடைந்த கிராம மக்கள், “அடிப்படை வசதிகள் இல்லையெனில் தேர்தல் வேண்டாம்” என்ற பதாகைகளை ஏந்தி, காலி குடங்களுடன் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாளை நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், “எங்கள் கிராமத்திற்கு குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டால்தான் எங்களால் சாதாரண வாழ்க்கை நடத்த முடியும்.
பல ஆண்டுகளாக பின்தங்கிய நிலையில் இருக்கும் எங்கள் கிராமத்தை காப்பாற்ற அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam