Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 22 ஏப்ரல் (ஹி.ச)
மதுரையைச் சேர்ந்த மணிபாரதி தாக்கல் செய்த பொதுநல வழக்கில், தமிழக புலிகள் காப்பகங்கள், விலங்குகள் சரணாலயங்கள் மற்றும் வனப்பகுதிகளில் காட்டு தீயை தடுக்க மேம்பட்ட தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தவும், வன தீத்தடுப்பு மேலாண்மைக்கான வழிகாட்டல்களை குறிப்பிட்ட காலக்கெடுவில் செயல்படுத்தவும் உத்தரவிடக் கோரப்பட்டுள்ளது.
அந்த மனுவில், 2021 முதல் 2025 வரை தமிழகத்தில் ஏற்பட்ட காட்டு தீ விபத்துகளின் காரணங்கள் குறித்து விரிவான விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், ஸ்ரீவில்லிபுத்தூர்–மேகமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட பகுதிகளுக்கான மறுசீரமைப்பு திட்டம் தயாரிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. மேலும், கொடைக்கானல், குமரி, மேகமலை விலங்குகள் சரணாலயங்களில் காட்டு தீ தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மத்திய அரசின் வன மேலாண்மை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதி சரியாக பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் கண்காணித்து, எதிர்காலத்தில் காட்டு தீ தடுப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும் என மனுதாரர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், “வன தீத்தடுப்பு மேலாண்மை வழிகாட்டல்களில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் தமிழகத்தில் முழுமையாக நடை முறைப்படுத்தப்படவில்லை.
அவற்றை முறையாக செயல்படுத்தினால் காட்டு தீ சம்பவங்களை பெருமளவில் கட்டுப்படுத்த முடியும் என்று வாதிடப்பட்டது.
இதனை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கு தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam