ஜனநாயகன் லீக் விவகாரம் - முன்ஜாமின் கோரிய மனுவுக்கு தயாரிப்பு நிறுவனம் எதிர்ப்பு
சென்னை, 22 ஏப்ரல் (ஹி.ச.) நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் சமீபத்தில் இணையதளத்தில் சட்டவிரோதமாக கசிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் வெளியானதால், தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக
Jananayagan


சென்னை, 22 ஏப்ரல் (ஹி.ச.)

நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் சமீபத்தில் இணையதளத்தில் சட்டவிரோதமாக கசிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

படம் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் வெளியானதால், தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் அதிர்ச்சி அடைந்து, சென்னை அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில், எடிட்டராக பணியாற்றும் உமா சங்கர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முயன்ற நிலையில், உமா சங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

தனது மனுவில், சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், தற்போது உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘ஜனநாயகன்’ பட கசிவுக்கு தன்னுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும், திரைத்துறையில் பெரிய தொடர்புகள் இல்லாத தன்னை தவறாக இந்த வழக்கில் சிக்கவைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதனால் தன்னை கைது செய்யாமல் பாதுகாக்க முன் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்தபோது, தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான தரப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இந்த வழக்கில் உமா சங்கர் முக்கிய குற்றவாளி எனவும், அவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் வாதிட்டது.

மேலும், படம் கசிந்த பிறகு கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிக்கவே அவர் மருத்துவமனையில் சேர்ந்து உள்ளார் என்றும் சந்தேகம் தெரிவித்தனர்.

மற்றொரு புறம் காவல்துறை தரப்பில், உமா சங்கர் தான் இந்த படத்தை இணையத்தில் வெளியிட்டதற்கான போதிய ஆதாரங்கள் உள்ளதாகவும், விசாரணைக்கு அவர் அவசியமான நபர் என்றும் வாதிக்கப்பட்டது.

இந்த வழக்கின் தன்மை கருதி, முன் ஜாமீன் வழங்குவது விசாரணையை பாதிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்புகளின் வாதங்களையும் கேட்ட நீதிபதி சி. குமரப்பன், தயாரிப்பு நிறுவனத்திற்கு இடையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கினார்.

மேலும், இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஏப்ரல் 30ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு தற்போது திரைத்துறையிலும், சட்ட வட்டாரங்களிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

திரைப்படங்கள் இணையத்தில் கசிவது தொடர்பான பிரச்சினைகள் மீண்டும் முன்வந்துள்ள நிலையில், இந்த வழக்கின் முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / ANANDHAN