Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம் 22 ஏப்ரல் (ஹி.ச.)
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் ஏற்பட்ட பட்டாசு வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 40 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரசித்திபெற்ற திருச்சூர் பூரம் திருவிழா வரவிருக்கும் நிலையில், முண்டத்திகோடு பகுதியில் பட்டாசுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கில் திடீரென வெடிப்பு ஏற்பட்டது.
கடும் வெப்பம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
திருச்சூரில் பட்டாசு சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்து மிகுந்த வேதனையை அளிக்கிறது.
காயமடைந்தவர்களுக்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்க முழு அரசு இயந்திரமும் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும், மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பிரிவு, சுகாதாரம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைகள் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தேவையானால் மாநிலத்திற்கு வெளியிலும் சிறப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள முதல்வர், இந்த துயர நேரத்தில் கேரள அரசு முழுமையாக துணை நிற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA