Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 ஏப்ரல் (ஹி.ச.)
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது,
தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்த்து முதல்முதலாக குரல் கொடுத்தவர் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்.
அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை ஆகியவற்றை வைத்து எதிர்கட்சிகளை பாஜக மிரட்டுகிறது.
அச்சுறுத்துகிறது.
அதன் அடிப்படையில் தான் பிரதமர் மோடி ஒரு தீவிரவாதி என கூறினேன்.
தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்ததை மறைத்து, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதாக மோடி கூறுவது அப்பட்டமான பொய்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா 2023-ம் ஆண்டிலேயே நிறைவேற்றப்பட்டுவிட்டது, அதற்கு நாங்களும் ஆதரவு அளித்தோம்.
இம் மசோதாவை அப்போதே நாங்கள் அமல்படுத்தக் கோரிய போது, ‘மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை முடிந்த பின்னரே சாத்தியம்’ என பிரதமர் கைவிரித்தார்.
ஆனால் இப்போது எதிர்க்கட்சிகள் மீது பழி போடுகிறார்.
உண்மையில், இம்மசோதாவில் இணைக்கப்பட்டுள்ள ‘தொகுதி மறுவரையறை’ அம்சமே தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் என்பதால் அதை எதிர்க்கிறோம்.
பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க உண்மையிலேயே மோடிக்கு எண்ணம் இருந்தால், தற்போதைய 543 தொகுதிகளிலேயே 33 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கலாம்.
பாஜக அரசுக்கு பெண்கள் மீதான அன்பல்ல, வெறும் அரசியல் நாடகம்.
மோடியும் அமித் ஷாவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களைக் கவிழ்ப்பதையே வேலையாகக் கொண்டுள்ளனர்.
சிபிஐ, அமலாக்கத் துறை மூலம் எதிர்க்கட்சியினரை மிரட்டி ஜனநாயகத்தைச் சீரழிக்கிறார்கள்.
தமிழகம், பெரியார், அண்ணா, காமராஜர் மற்றும் கலைஞர் ஆகியோரின் கொள்கை வழி வந்த மண்.
அண்ணாவின் பெயரில் கட்சி நடத்தும் அதிமுக, சமத்துவத்தை நம்பாத பாஜக-வுடன் இணைவது அண்ணாவின் தத்துவங்களுக்குச் செய்யும் துரோகம்.
தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க காங்கிரஸ் - திமுக கூட்டணியை மக்கள் வலுப்படுத்த வேண்டும்.
மாற்றாக வரும் சில கட்சிகள் மதச்சார்பற்ற வாக்குகளைப் பிரித்து, மறைமுகமாக
பாஜக-வுக்கே உதவும்.
எனவே, மக்கள் விழிப்புடன் இருந்து எங்கள் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b