Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 22 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்கத் திட்டமிடும் மக்களை குறிவைத்து தனியார் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பண்டிகை மற்றும் தொடர் விடுமுறைகளில் மட்டுமே காணப்பட்ட கட்டண உயர்வு, தற்போது தேர்தல் காலத்திலும் தொடர்கிறது.
வழக்கமான கட்டணத்தை விட 2 முதல் 3 மடங்கு வரை அதிகமாக வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
சென்னை – நாகர்கோவில் பயணத்திற்கு ரூ. 4,945 வரை, கன்னியாகுமரிக்கு ரூ. 4,549 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோவை செல்ல ரூ. 2,449, திருச்சி செல்ல ரூ. 2,500 வரை வசூலிக்கப்படுகிறது. குறைந்த நேரப் பயணங்களுக்குக் கூட அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருப்பது பயணிகளை அதிருப்தியடையச் செய்துள்ளது.
மேலும், “Exclusive Offer” என்ற பெயரில் போலியான சலுகைகள் காட்டி கட்டணத்தை குறைத்தது போல காட்டும் முயற்சிகளும் நடைபெறுகின்றன.
100 சதவீத வாக்குப்பதிவை ஊக்குவிக்கும் நிலையில், வாக்களிக்கச் செல்லும் மக்களிடமிருந்து இவ்வாறு அதிக கட்டணம் வசூலிப்பது முறையல்ல. அரசு பேருந்துகளில் இடம் இல்லாததை பயன்படுத்தி தனியார் பேருந்துகள் அநியாயமாக கட்டணம் உயர்த்துகின்றன என பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
போக்குவரத்துத் துறை கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள போதிலும், நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
தேர்தல் காலத்திலும் தொடரும் இந்த ‘கட்டணக் கொள்ளைக்கு’ எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam