பழனியில் கொடியேற்றத்துடன் தொடங்கிய லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் விழா - வரும் 30-ம் தேதி தேரோட்டம்
திண்டுக்கல், 22 ஏப்ரல் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரத் திருவிழாக்கள் மிகச் சிறப்பாக நிறைவுபெற்ற நிலையில், அதன் முக்கிய உபகோயிலான அருள்மிகு லட்சுமி நாராயணப் பெருமா
Lakshmi Narayana Perumal


திண்டுக்கல், 22 ஏப்ரல் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரத் திருவிழாக்கள் மிகச் சிறப்பாக நிறைவுபெற்ற நிலையில், அதன் முக்கிய உபகோயிலான அருள்மிகு லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயிலில் இன்று சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாகத் தொடங்கியது.

விழாவினை முன்னிட்டு, அதிகாலை முதலே கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. கருடாழ்வார் மற்றும் சங்கு சக்கரம் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறக் கொடிப் படத்திற்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர், மேளதாளங்கள் முழங்கக் கொடிப் படம் கோயிலைச் சுற்றி வலம் வரச் செய்யப்பட்டு, செப்புக் கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. கொடிக்கம்பத்திற்குத் தர்ப்பை மற்றும் மலர்மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

கொடியேற்ற நிகழ்வைத் தொடர்ந்து, கொடிக்கம்பம் அருகே எழுந்தருளிய அருள்மிகு லட்சுமி சமேத நாராயணப் பெருமாளுக்குச் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. அப்போது திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பக்தியுடன் பாடப்பட்டுத் தீபாராதனை நடைபெற்றது. இந்தப் பூஜைகளைத் திருவள்ளரை கோபாலகிருஷ்ண பட்டர், வரதராஜ அய்யங்கார், கார்த்தி அய்யங்கார் மற்றும் பூஜைமுறை குருக்கள் ஆகம விதிப்படி நடத்தினர்.

பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி திருக்கல்யாணமும், ஏப்ரல் 30-ஆம் தேதி சித்திரை தேரோட்டமும் நடைபெற உள்ளது. இன்றைய கொடியேற்ற நிகழ்ச்சியில் பழனிக் கோயில் உதவி ஆணையர் செந்தில்குமார், கந்தவிலாஸ் செல்வக்குமார், மண்டகப்படிதாரர் கார்த்திகேயன், புஷ்பகைங்கர்ய சபா மருதசாமி மற்றும் கோயில் பணியாளர்கள் எனப் பல முக்கியப் பிரமுகர்களும் பக்தர்களும் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / ANANDHAN