Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 22 ஏப்ரல் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதியில், நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) இன்று வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
பழனி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த ஸ்ட்ராங்க் ரூம் இன்று காலை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது. அதிகாரப்பூர்வமாக சீல்கள் அகற்றப்பட்டு, இயந்திரங்கள் வெளியே எடுக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தேவையான EVM இயந்திரங்கள் தனித்தனியாக பிரித்து, லாரிகள் மூலம் அந்தந்த மையங்களுக்கு அனுப்பப்பட்டன.
குறிப்பாக, கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள சாலை வசதி இல்லாத கிராமங்களுக்கு இயந்திரங்களை கொண்டு செல்ல அதிகாரிகள் சிறப்பு கவனம் எடுத்துள்ளனர்.
வெள்ளகவி போன்ற மலைப்பகுதிகளுக்கு சாலை வசதி இல்லாத காரணத்தால், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், இயந்திரங்கள் தலைச்சுமையாகவும், சில இடங்களில் குதிரைகள் மூலமும் கொண்டு செல்லப்பட்டன.
மேலும், வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள மண்டல மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் இன்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இணைய வசதி மற்றும் வெப்காஸ்டிங் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாளை (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam