ராஜபாளையத்தில் பணப் பட்டுவாடா - தேர்தலை தள்ளிவைக்க நாம் தமிழர் கட்சி கோரிக்கை
விருதுநகர், 22 ஏப்ரல் (ஹி.ச.) விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் தேர்தலை முன்னிட்டு பணப் பட்டுவாடா குறித்த குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதையடுத்து தேர்தலை தற்காலிகமாக தள்ளிவைக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி கோரிக
பணப்பட்டுவாடா


விருதுநகர், 22 ஏப்ரல் (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் தேர்தலை முன்னிட்டு பணப் பட்டுவாடா குறித்த குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதையடுத்து தேர்தலை தற்காலிகமாக தள்ளிவைக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

ராஜபாளையம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் கார்த்திகேயன் போட்டியிட்டு வருகிறார்.

தேர்தல் விதிமுறைகளை மீறி பணம் வழங்கப்படுவதை தடுக்க அவர் மற்றும் கட்சியினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஞானசம்பந்தர் தெருவில் பூத் லிப் பட்டியலை வைத்துக் கொண்டு பணம் வழங்கியதாக கூறப்படும் திமுக நிர்வாகிகளிடமிருந்து ரூ.15,000 பணத்தை நாம் தமிழர் கட்சியினர் பறிமுதல் செய்தனர்.

அதேபோல், ராம்நகர் பகுதியில் பணப் பட்டுவாடாவில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட பாஜக நிர்வாகிகளிடமிருந்து ரூ.25,000 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் ரூ.40,000 பணத்தை மருத்துவர் கார்த்திகேயன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தொடர்ந்து பணப் பட்டுவாடா நடைபெறுவதால் ராஜபாளையம் தொகுதியில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடத்த முடியாத சூழல் நிலவுவதாக நாம் தமிழர் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இதனால், தொகுதியில் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் எனக் கோரி, 269 பூத் முகவர்கள் உடன் நாம் தமிழர் கட்சியினர் சென்னை தேர்தல் அதிகாரியிடம் மனு அளிக்க சென்றுள்ளனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P