Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்களிக்க சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களை குறிவைத்து தனியார் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டண வசூலில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பண்டிகை மற்றும் தொடர் விடுமுறைகளில் மட்டுமே நடந்துவந்த இந்த கட்டண உயர்வு, தற்போது தேர்தல் நாளையும் விட்டு வைக்காமல் தொடர்வதால் பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளில் வழக்கமான கட்டணத்தை விட 2 முதல் 3 மடங்கு வரை அதிகமாக வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, சென்னை – நாகர்கோவில் பயணத்திற்கு Volvo Multi-Axle AC Sleeper பேருந்துகளில் ரூ.4,945 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை – கன்னியாகுமரி வழித்தடத்தில் ரூ.4,549 வரை, சென்னை – கோவை பயணத்திற்கு ரூ.2,449 வரை, சென்னை – திருச்சி போன்ற குறைந்த தூரப் பயணங்களுக்கே ரூ.2,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுவது பயணிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
ஒரு குடும்பம் முழுவதும் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டுமெனில், அவர்களின் மாத வருமானத்தின் பெரும்பகுதி பயணச் செலவிற்கே செல்கிறது என பயணிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும், “Exclusive Offer” என்ற பெயரில் சிறிய அளவு தள்ளுபடி காட்டி, அதிக கட்டணத்தை நியாயப்படுத்தும் முயற்சிகளும் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்ய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தனியார் பேருந்துகள் இவ்வாறு கட்டணத்தை அதிகரிப்பது ஜனநாயகக் கடமையை பாதிக்கும் செயலாக பயணிகள் கண்டனம் தெரிவிக்கின்றனர்.
அரசு பேருந்துகளில் முன்பதிவு இடங்கள் நிரம்பியிருப்பதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டண உயர்வில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை “அதிக கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ள போதிலும், நடைமுறையில் கட்டுப்பாடு குறைவாகவே உள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
பண்டிகை காலங்களில் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த ‘கட்டணக் கொள்ளை’, தற்போது தேர்தல் சூழலிலும் நீடிப்பதால், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு தலையீடு அவசியம் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P