Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
மாநிலம் முழுவதும் மொத்தம் 5,73,43,291 வாக்காளர்கள் உள்ளதாகவும், இதில் 14,59,093 பேர் முதல் முறையாக வாக்களிக்க உள்ளதாகவும் கூறினார்.
இதுவரை 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று வரை தபால் வாக்குகளை பதிவு செய்யலாம் என்றும் தெரிவித்தார்.
இந்த தேர்தலுக்காக 1,06,408 இவிஎம் இயந்திரங்கள், 75,064 கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் 75,064 விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
அவசர தேவைக்காக 20 சதவீத இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 3 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். பாதுகாப்பு பணிக்காக 83 ஆயிரம் காவலர்கள் மற்றும் 300 கம்பெனி துணை ராணுவப்படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கைக்காக 63 மையங்களும், 4 கட்டுப்பாட்டு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் விதிமீறல்களை தடுக்கும் நடவடிக்கையாக ரூ.1,262 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சமூக வலைதள கண்காணிப்பில், 143 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 2,180 இணைய முகவரிகள் (URL) முடக்கப்பட்டுள்ளன.
மாதிரி வாக்குச்சாவடிகள் 249, முழுமையாக பெண்கள் பணியாற்றும் மையங்கள் 325, மாற்றுத்திறனாளிகள் பணியாற்றும் மையங்கள் 71, இளைஞர்கள் பணியாற்றும் மையங்கள் 79 என அமைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் பசுமை வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், மாநிலம் முழுவதும் 5,949 பதற்றமான வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வாக்காளர்கள் தேவையான தகவல்களை அறிந்து கொள்ள “வாக்காளர் வழிகாட்டி” என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், வாக்குச்சாவடிகளில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், வாக்குப்பதிவை அதிகரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
Hindusthan Samachar / P YUVARAJ