உமாநாத் ஐஏஸ் மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி – தேர்தல் ஆணையம் பதிலை ஏற்ற நீதிமன்றம்
சென்னை, 22 ஏப்ரல் (ஹி.ச.) முதலமைச்சரின் செயலாளர் உமாநாத் ஐஏஸ் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. முதலமைச்சரின் செயலாளராக உள்ள உமாநாத், தேர்தல் காலத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் க
Uma


சென்னை, 22 ஏப்ரல் (ஹி.ச.)

முதலமைச்சரின் செயலாளர் உமாநாத் ஐஏஸ் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

முதலமைச்சரின் செயலாளராக உள்ள உமாநாத், தேர்தல் காலத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவுகள் பிறப்பித்து வருவது தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக கூறி, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி பாஜக சார்பில் வழக்கறிஞர் ஏற்காடு மோகன்தாஸ் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றத்தில், தேர்தல் ஆணையம் தனது பதிலை தாக்கல் செய்தது.

அதில், மனுதாரர் உமாநாத் மீது எந்தவொரு குறிப்பிட்ட குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை என்றும், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக நிரூபிக்கும் ஆதாரங்களும் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தது.

மேலும், அதிகாரிகள் தங்களது நிர்வாக பொறுப்புகளை மேற்கொள்வது வழக்கமான செயல்பாடாகும் என்றும், அது தேர்தல் விதிமீறலாக கருத முடியாது என்றும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.

இதைப் பரிசீலித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மதிகாரி மற்றும் நீதிபதி அருள் முருகன் அமர்வு, தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்றுக்கொண்டு, மனுவில் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதன் மூலம், உமாநாத் ஐஏஸ் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிலைநிறுத்தப்படாமல் வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ