Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 23 ஏப்ரல் (ஹி.ச.)
மேற்கு வங்காள சட்டசபையின் பதவிக்காலம் மே 7-ந் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், 294 தொகுதிகளை கொண்ட அந்த மாநிலத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதன்படி, இன்று (ஏப். 23) 152 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவும், ஏப். 29-ந்தேதி மீதமுள்ள 142 தொகுதிகளுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது.
வாக்கு எண்ணிக்கை மே 4-ந் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை தயாரித்தல் உள்ளிட்ட பணிகளை முடித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன.
ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் முனைப்பில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு போட்டியாக பா.ஜ.க. தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் தலைவர்கள் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தனர்.
அனல் பறந்த தேர்தல் பிரசாரம் கடந்த 21-ந் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில், முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதிகாலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தேர்தலை முன்னிட்டு, ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.472.89 கோடி மதிப்பிலான பணம், நகை உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
2,728 பறக்கும் படை குழுக்கள் மற்றும் கண்காணிப்பு குழுக்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது
‘எக்ஸ்’ (X) வலைதள பதிவில், “மேற்கு வங்காளத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
இந்த ஜனநாயக திருவிழாவில் அனைத்து குடிமக்களும் முழு உற்சாகத்துடன் பங்கேற்க வேண்டும்.
குறிப்பாக இளம் நண்பர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் வாக்களிக்குமாறு நான் தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA